மதுரை: தஞ்சையைச் சேர்ந்த குணசேகரன் என்பவர் தன்னுடைய ஓய்வூதிய பலன்களை நிறுத்தி வைத்து ஆதிதிராவிட பழங்குடியின நலத்துறையின் மாநில ஆய்வு குழு பிறப்பித்த உத்தரவை ரத்து செய்யக் கோரி உயர்நீதிமன்ற மதுரை அமர்வில் மனு ஒன்றினைத் தாக்கல் செய்திருந்தார்.
இந்த மனு நீதிபதிகள் சுப்ரமணியன் மற்றும் விக்டோரியா கௌரி அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தபோது, "மனுதாரர் பட்டியல் இன பழங்குடியின வகுப்பைச் சேர்ந்தவர் என 1980ல் தாசில்தாரால் சான்று வழங்கப்பட்டுள்ளது. அந்த அடிப்படையில் மனுதாரர் தனியார் வங்கி ஒன்றில் கிளர்க்காக 1982ல் பணியில் சேர்ந்துள்ளார். அத்தோடு மனுதாரர் 50 சதவீத மாற்றத்திறனாளியாவார்.
இந்த நிலையில், 2013ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் ஓய்வு பெற்றுள்ளார். அவரது சாதி சான்றிதழ் 1993ஆம் ஆண்டுதான் சரிபார்க்கப்பட்டுள்ளது. அப்போது வருவாய் மண்டல அலுவலர் மனுதாரர் பட்டியல் பழங்குடியினத்தை சார்ந்தவர் அல்ல என குறிப்பிட்டுள்ளார்.
இதன் பின்னர், அது தொடர்பாக மாவட்ட ஆட்சியர் விசாரணை நடத்தியுள்ளார். அதை எதிர்த்து மனுதாரர் தொடர்ந்த வழக்கில் நீதிமன்றம் தடை உத்தரவு பிறப்பித்துள்ளது. அதனைத் தொடர்ந்து 2019ஆம் ஆண்டு ஊழல் தடுப்பு கண்காணிப்புக் குழு இந்த பிரச்சனை தொடர்பாக விசாரித்து மனுதாரரிடம் விளக்கம் கேட்டுள்ளது.
ஆனால், விளக்கம் அளிக்க மனுதாரருக்கு போதிய கால அவகாசம் வழங்கப்படவில்லை என்பது தெளிவாகிறது. அதன் பின்னரே, ஆதிதிராவிட நலத்துறையின் மாநில அளவிலான ஆய்வு குழு இந்த விவகாரம் தொடர்பான உத்தரவை ஒன்றை பிறப்பித்துள்ளது.
இதையும் படிங்க:போலீசார் தாக்கியதில் கணவர் உயிரிழந்ததாக மனைவி தாக்கல் செய்த மனு தள்ளுபடி!
இந்த வழக்கை பொறுத்தவரை, மனுதாரர் 32 ஆண்டுகள் தனியார் வங்கியில் முறையாக பணியாற்றி, ஓய்வு பெற்றுள்ளார். விசாரணை தாமதமானதால் அவருக்கான ஓய்வூதிய பலன்களை பெறுவதிலும் தாமதம் ஆகியுள்ளது. தற்போது வயதாகிய நிலையில் உள்ள மனுதாரர், மீண்டும் ஒரு விசாரணையை எதிர்கொள்ள வேண்டும் என நாங்கள் விரும்பவில்லை.
ஆகவே, மனுதாரரது பணப்பலன்களை நிறுத்தி வைத்து ஆதிதிராவிட பழங்குடியின நலத்துறையின் மாநில ஆய்வு குழு பிறப்பித்த உத்தரவு ரத்து செய்யப்படுகிறது. அவருக்கு வழங்கப்பட வேண்டிய பணப்பலன்களை 12 வாரத்திற்கு உள்ளாக வழங்க வேண்டும். மனுதாரரின் வாரிசுகள் பட்டியலின பழங்குடியின வகுப்பைச் சேர்ந்தவர்களுக்கான உரிமையை கோர விரும்பினால் அவர்களின் வகுப்பு ஆவணங்களை வழங்கி உறுதி செய்ய வேண்டும்" என உத்தரவிட்டு, வழக்கை முடித்து வைத்தனர்.
ஈடிவி பாரத் தமிழ்நாடு (ETV Bharat Tamil Nadu) ஈடிவி பாரத் தமிழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணையஇங்கே க்ளிக் செய்யவும்