சென்னை: சென்னையை சேர்ந்த சார்லஸ் அலெக்ஸாண்டர் என்பவர் தொடர்ந்துள்ள வழக்கில், "கடந்த 2008ஆம் ஆண்டு முதல் இதுவரை 15 ஆண்டுகளில் மொத்தம் 15,924 புதிய வழக்கறிஞர்கள் தங்களை பார் கவுன்சிலில் பதிவு செய்து வழக்கறிஞர் தொழில் புரிந்து வருகிறார்கள். இதில் கடந்த 2008ஆம் ஆண்டில் எழும்பூர் நீதிமன்ற வளாகத்திலேயே வழக்கறிஞர் ஒருவர் வெட்டிக் கொல்லப்பட்டு, அந்த வழக்கில் 3 வழக்கறிஞர்கள் கைது செய்யபட்டனர்.
2011ஆம் ஆண்டு மூத்த வழக்கறிஞர் சங்கரசுப்பு மகன் வழக்கறிஞர் சதிஷ்குமார் படுகொலை செய்யப்பட்டு, இதுவரை கொலையாளிகளோ? கொலைக்கான காரணமோ? தெரியாத நிலையில் வழக்கு நிலுவையில் உள்ளது. 2013ஆம் ஆண்டு தஞ்சாவூரை சேர்ந்த வழக்கறிஞர் கண்ணன் நீதிமன்ற பணியை முடித்து வீடு திரும்பி சென்ற போது மர்ம நபர்கள் வழிமறித்து சாலையில் வைத்து கொடுரமான முறையில் ஆயுதங்களால் வெட்டி படுகொலை செய்யப்பட்டார்.
பழிக்கு பழி சம்பவமாக சேலம், ராசிபுரம் நீதிமன்றங்களில் வழக்கறிஞராக பணியாற்றி வந்த நடராஜன், கடந்த 2013ஆம் ஆண்டு மர்ம கும்பலால் வெட்டி படுகொலை செய்யப்பட்டார். அதேபோல், பழி தீர்க்கும் சம்பவமாக கடந்த 2014ஆம் ஆண்டு சென்னை அமைந்தகரையில் உணவகத்தில் உணவு அருந்தி கொண்டிருந்த வழக்கறிஞர் நித்தியானந்தம் என்பவரை 4 பேர் கொண்ட கும்பல் வெட்டி சாய்த்தது.
மேலும், நாயுடன் இரவில் வாக்கிங் சென்ற வழக்கறிஞர் மதியழகன் கடந்த 2014ஆம் ஆண்டு தாக்கப்பட்டு வெட்டி படுகொலை செய்யப்பட்டார். திருமணத்தை மீறிய உறவில் இருந்த கள்ளக்குறிச்சி வழக்கறிஞர் சண்முகம் கடந்த 2014ஆம் ஆண்டு கொலை செய்யப்பட்டார். கடந்த 2015ஆம் ஆண்டு எழும்பூர் நீதிமன்றத்தில் வழக்கறிஞர் சங்க தேர்தல் வெற்றியை கொண்டாடிய வழக்கறிஞர் ஸ்டாலின் தாக்கப்பட்டு கொலை செய்யப்பட்டார். மாமல்லபுரத்திற்கு வழக்கு தொடர்ந்தவருடன் சென்ற வழக்கறிஞர் கமலேஷ் கடந்த 2015ஆம் ஆண்டு துப்பாக்கியால் சுட்டுக் கொல்லப்பட்டார்.
இதே போல், இந்தாண்டு மட்டும் கடந்த மார்ச் மாதம் சைதாப்பேட்டை நீதிமன்றத்தில் பணியாற்றிய வழக்கறிஞர் ஜெய் கணேஷ், தென்காசி வழக்கறிஞர் அசோக்குமார், துத்துக்குடி வழக்கறிஞர் முத்துக்குமாரை தொடர்ந்து கடந்த ஜூலை 5ஆம் தேதி பகுஜன் சமாஜ் கட்சியின் மாநில தலைவரும், வழக்கறிஞருமான ஆம்ஸ்ட்ராங் என 20க்கும் மேற்பட்ட வழக்கறிஞர்கள் கொலை செய்யப்பட்டுள்ளனர்.