தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

"போதைப் பொருள் வழக்குகள் CBI-க்கு மாற்றப்படும்" - தமிழக அரசுக்கு சென்னை உயர்நீதிமன்றம் வார்னிங்! - Madras High Court

தமிழகம் முழுவதும் போதைப் பொருள் புழக்கத்தை கட்டுப்படுத்த தவறினால், அது சம்பந்தமான வழக்குகள் சிறப்பு புலனாய்வு முகமைக்கு (CBI) மாற்ற உத்தரவிடப்படும் என்று தமிழக அரசுக்கு சென்னை உயர்நீதிமன்றம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

சென்னை உயர்நீதிமன்றம் கோப்புப்படம்
சென்னை உயர்நீதிமன்றம் கோப்புப்படம் (Credits - ETV Bharat Tamil Nadu)

By ETV Bharat Tamil Nadu Team

Published : Sep 12, 2024, 6:58 AM IST

சென்னை: சென்னை பெரும்பாக்கம் பகுதி மக்களுக்கு அடிப்படை வசதிகளை ஏற்படுத்தித் தருவது தொடர்பான வழக்கில், அப்பகுதிகளில் போதைப் பொருள் புழக்கம் உள்ளதாக நீதிமன்றத்தால் நியமிக்கப்பட்ட வழக்கறிஞர் ஆணையர் அறிக்கை அளித்திருந்தார். இந்த அறிக்கை மீது எடுத்த நடவடிக்கை குறித்து விளக்கம் அளிக்க தமிழக அரசுக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது.

இதனை அடுத்து, இந்த வழக்கு பொறுப்பு தலைமை நீதிபதி டி.கிருஷ்ணகுமார் மற்றும் நீதிபதி பி.பி.பாலாஜி ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது, போதைப்பொருள் தடுப்பு பிரிவு காவல்துறை தரப்பில் அறிக்கை தாக்கல் செய்யப்பட்டது.

அதில், "போதைப்பொருளை ஒழிக்க பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன. இதற்கான பிரிவு முழு அளவில் செயல்பட்டு வருகிறது. போலீசார் ரோந்து வாகனங்களில் தொடர் கண்காணிப்பில் ஈடுபட்டு வருகிறார்கள். சமூக விரோத செயல்களில் ஈடுபடுபவர்களை கண்டறிந்து நடவடிக்கை எடுக்கப்படுகிறது. பள்ளி மற்றும் கல்லூரிகளில் போதைப்பொருள் ஆபத்து குறித்து விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடத்தப்படுகிறது.

இதையும் படிங்க:பெட்ரோல், டீசல் விலையை ஜிஎஸ்டி வரம்புக்குள் கொண்டு வரக் கோரிய வழக்கு.. மத்திய அரசு பதிலளிக்க உயர் நீதிமன்றம் உத்தரவு!

மேலும், திருவள்ளூர் மாவட்ட சட்ட பணிகள் ஆணை குழுவின் அறிக்கையின் அடிப்படையில், கடப்பாக்கம் பகுதி உள்ளிட்ட பகுதிகளில் சிசிடிவி கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளன. சுனாமி குடியிருப்பு பகுதியில் உள்ள டாஸ்மாக் கடைகள் மூடப்பட்டுள்ளது" என்று கூறப்பட்டிருந்தது.

இந்த அறிக்கையை பார்த்த நீதிபதிகள், "தமிழகம் முழுவதும் போதைப்பொருள் புழக்கத்தை கட்டுப்படுத்த தவறினால் வழக்கை சிறப்பு புலனாய்வு முகமைக்கு (CBI) மாற்ற உத்தரவிடப்படும்" என்று எச்சரித்தனர்.

மேலும், "இந்த வழக்கில் போதைப்பொருளை ஒழிக்க எடுக்கப்பட்ட நடவடிக்கை குறித்து அரசு அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும்" என்று காவல்துறைக்கு உத்தரவிட்டு வழக்கு விசாரணையை செப்டம்பர் 19ஆம் தேதிக்கு ஒத்திவைத்தனர்.

ABOUT THE AUTHOR

...view details