சென்னை:சென்னையை அடுத்த செங்கல்பட்டு மாவட்டம், காட்டாங்குளத்தூரில் திமுக வடக்கு ஒன்றிய செயலாளராகச் செயல்பட்டு வருபவர் ஆராமுதன். இவர், வண்டலூர் மேம்பாலம் கீழ்ப்பகுதியில் கட்சி அலுவலகம் நடத்தி வருகிறார். இந்த நிலையில், கடந்த மாதம் வண்டலூர் மேம்பாலம் அருகே புதிதாகப் பேருந்து நிலையம் கட்டப்பட்டுத் திறக்கப்பட்டுள்ளன.
இந்த புதிய பேருந்து நிலையத்தைப் பார்வையிடுவதற்காகத் தனது காரில் ஆராமுதன் வந்தார். அப்போது, அங்கு மறைந்திருந்த மர்ம நபர்கள் சிலர் திடீரென நாட்டு வெடிகுண்டுகளை காரின் மீது தூக்கி வீசி உள்ளனர். இதில், காரின் முன் பக்கம் கண்ணாடி முழுவதுமாக உடைந்தது.
இதனால், அதிர்ச்சி அடைந்த ஆராமுதன் காரில் இருந்து இறங்கி அங்கிருந்து தப்பிச் செல்ல முயன்றபோது, அந்த மர்ம நபர்கள் கத்தி போன்ற பயங்கர ஆயுதங்களால் அவரை கொடூரமாகத் தாக்கியுள்ளனர். இந்த தாக்குதலில் சம்பவ இடத்திலேயே அவர் பரிதாபமாக உயிரிழந்தார்.
இதன் தொடர்ச்சியாக, இந்த கொலை வழக்கில் காஞ்சிபுரம், திருப்பூரைச் சேர்ந்த 5 பேர், ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் நீதிமன்றத்தில் சரணடைந்தனர். இந்த சம்பவம் தொடர்பான வழக்கு, உயர்நீதிமன்ற நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் முன்பு விசாரணைக்கு வந்தது.