தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

ராகிங்கில் ஈடுபடுவதாக இருந்தால், கல்லூரிக்குச் செல்ல வேண்டிய நோக்கம் என்ன? - சரமாரியாகக் கேள்வி எழுப்பிய நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ்! - Chennai

MHC dismissed the ragging case: ஒழுக்கமில்லாமல் கல்வி பெறுவதால் எந்த அர்த்தமும் இல்லை எனத் தெரிவித்த சென்னை உயர் நீதிமன்றம், சக மாணவரை ராகிங் செய்ததாக 8 மாணவர்கள் மீது பதிவு செய்யப்பட்ட வழக்கை ரத்து செய்து உத்தரவிட்டுள்ளது.

Madras high court
சென்னை உயர் நீதிமன்றம்

By ETV Bharat Tamil Nadu Team

Published : Feb 23, 2024, 8:47 PM IST

சென்னை: கோவையில் உள்ள பொறியியல் கல்லூரியில் படித்து வந்த எட்டு மாணவர்கள் மதுபானம் வாங்கப் பணம் தரவில்லை எனக்கூறி, ஜூனியர் மாணவர் ஒருவருக்கு மொட்டையடித்துத் தாக்கியதுடன், விடுதி அறையில் பூட்டி வைத்து ராகிங் செய்ததாக பீளமேடு போலீசில் புகார் அளிக்கப்பட்டது. இந்தப் புகாரின் அடிப்படையில் இந்தியத் தண்டனைச் சட்டம், ராகிங் தடைச் சட்டத்தின் கீழ் ராகிங் செய்த மாணவர்கள் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது.

இந்த வழக்கை ரத்து செய்யக் கோரி வழக்குப்பதிவு செய்யப்பட்ட எட்டு மாணவர்களும் மனு ஒன்றைத் தாக்கல் செய்தனர். அந்த மனு நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் முன் இன்று (பிப்.23) விசாரணைக்கு வந்தது. அப்போது தங்களுக்குள் சமரசம் ஏற்பட்டு விட்டதால் வழக்கை ரத்து செய்ய வேண்டும் என மாணவர்கள் தரப்பில் தெரிவிக்கப்பட்டது. நீதிமன்றத்தில் ஆஜராகியிருந்த பாதிக்கப்பட்ட மாணவரும், அவரது தந்தையும் இந்த விவகாரத்தைப் பெரிதுபடுத்த விரும்பவில்லை எனவும், குற்றம் சாட்டப்பட்ட மாணவர்கள் தங்கள் வீட்டிற்கு வந்து மன்னிப்பு கோரியதாகவும், எந்த நிர்ப்பந்தமும் தரவில்லை எனவும் தெரிவித்தனர்.

இதையடுத்து, எட்டு மாணவர்கள் மீதான வழக்கை ரத்து செய்த நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ், ராகிங் செயல்களில் ஈடுபடுவதாக இருந்தால், கல்லூரிக்குச் செல்ல வேண்டிய நோக்கம் என்ன எனக் கேள்வி எழுப்பியதுடன், இதற்குப் பதில் படிக்காமல் இருப்பதே நல்லது எனத் தெரிவித்துள்ளார். ஒழுக்கமில்லாமல் கல்வி பெறுவதால் எந்த அர்த்தமும் இல்லை. மற்றொருவரைத் துன்புறுத்துவதன் மூலம் என்ன இன்பம் கிடைக்கிறது எனப் புரிந்து கொள்ள முடியவில்லை? பள்ளியில் படித்த திருக்குறளை வாழ்க்கையில் பின்பற்றாவிட்டால் அதைப் படித்து என்ன பயன்?" எனக் குற்றம் சாட்டப்பட்ட மாணவர்களை நோக்கி நீதிபதி கேள்வி எழுப்பினார்.

அதைத்தொடர்ந்து, "படிக்க வைப்பதற்காகப் பெற்றோர் படும் கஷ்டத்தை மாணவர்கள் புரிந்து கொள்ள வேண்டும். மனிதத்தன்மையற்ற ராகிங் செயலால் மற்றவரைத் துன்புறுத்துவதன் மூலம் இன்பமடைவர் மனரீதியாகப் பாதிக்கப்பட்டவர். மாணவப் பருவத்தில் இளைய சமுதாயத்தினர் ரசித்து வாழ வேண்டுமே தவிர, ராகிங் போன்ற செயல்களில் ஈடுபடக்கூடாது" என அம்மாணவர்களுக்கு அறிவுறுத்தினார்.

இதையும் படிங்க:"மெத்தனமாக இருந்து விடாதீர்கள்!"- ஸ்டாலின் விடுத்த எச்சரிக்கை! கலக்கத்தில் நிர்வாகிகள்

ABOUT THE AUTHOR

...view details