சென்னை: அண்ணா பல்கலைக்கழக மாணவி கடந்த டிசம்பர் 23ஆம் தேதி பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்ட சம்பவத்தில் ஞானசேகரன் என்பவர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ள நிலையில், சென்னை உயர் நீதிமன்றம் தாமாக முன்வந்து இந்த வழக்கை விசாரணைக்கு எடுத்துள்ளது.
தொடர்ந்து, மாணவி பாலியல் வன்கொடுமை வழக்கில் மூன்று பெண் ஐபிஎஸ் அதிகாரிகள் கொண்ட சிறப்பு குழு விசாரணை செய்யவும், மாணவிக்கு ரூ.25 லட்சம் இழப்பீடு வழங்கவும் சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
இதற்கிடையில், மாணவி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட விவகாரத்தில் மாணவிக்கு நீதி மற்றும் பெண்கள் பாதுகாப்பு கேட்டு பாமக-வின் மகளிர் அணி சார்பாக, போராட்டம் நடத்த அனுமதி கேட்டு காவல்துறைக்கு மனு அளித்துள்ளனர். ஆனால், போராட்டத்திற்கு மனுவை காவல்துறை நிராகரித்துள்ளது. இதையடுத்து, போராட்டம் நடத்த அனுமதி வழங்கக்கோரி பாமக மகளிர் அணி சார்பில், சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி வேல்முருகன் முன்பு முறையீடு செய்யப்பட்டுள்ளது.