மதுரை:ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் நாச்சியார் கோயிலின் ஆடி உற்சவ திருவிழா மற்றும் தேர் திருவிழாவில் சாதி அடையாள ஆடைகள், ரிப்பன்கள், துண்டு, கொடிகள் ஆகியவற்றை பயன்படுத்தவும் தடை விதிப்பதோடு, குறிப்பிட்ட சமுதாயத்திற்கு சார்பாக கோஷங்களை எழுப்பவும் தடை விதிக்க கோரிய வழக்கில், அமைதிப் பேச்சுவார்த்தையில் எடுக்கப்பட்ட தீர்மானங்களின் அடிப்படையில், சாதிய அடையாளமின்றி ஒற்றுமையாக இணைந்து தேர்த் திருவிழா நடப்பதை மாவட்ட நிர்வாகம் உறுதி செய்ய வேண்டும் என உயர் நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது.
விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் சேர்ந்த சந்தனகுமார் உயர்நீதிமன்ற மதுரை அமர்வில் பொதுநல வழக்கினைத் தாக்கல் செய்திருந்தார். அதில், "ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் நாச்சியார் கோயிலின் ஆடி உற்சவ திருவிழா மற்றும் தேர் திருவிழா ஆகஸ்ட் 7ஆம் தேதி நடைபெற உள்ளது. இவ்விழாவில் சீர்பாதம், எம்புதடி போடுதல், எண்ணெய் கொடுத்தல் ஆகிய நிகழ்வுகள் நடைபெறும்.
இதில் குறிப்பிட்ட சமூகத்தைச் சேர்ந்தவர்கள், அந்த சமூகத்தின் அரசியல் தலைவர் படம் அச்சிடப்பட்ட ஆடைகள் அணிந்து கொண்டு நிகழ்வை கடந்த சில ஆண்டுகளாக செய்து வருகின்றனர். அதோடு தலையில் குறிப்பிட்ட வண்ண ரிப்பன்கள், துண்டு, கொடிகளை வைத்துக் கொண்டு, சாதிய அரசியல் தலைவர்களுக்கு சாதகமாக கோஷங்களை எழுப்பிக் கொண்டும் தேர் திருவிழாவில் பங்கேற்கின்றனர்.
இது எந்த வகையிலும் கோயில் திருவிழாவோடு தொடர்புடையது அல்ல. தேர் திருவிழாவில் தேவையற்ற பிரச்சனைகள் எழுவதற்கு இவை காரணமாக அமைகின்றன. இது தொடர்பாக நடவடிக்கை கோரி அதிகாரிகளிடம் மனு அளித்தும் இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. ஆகவே, ஆடி உற்சவ திருவிழாவின் கடைசி நாள் அன்று சாதிய தலைவர்களின் உருவப்படம் பொறிக்கப்பட்ட டி-ஷர்ட்களை அணியவும், சாதி அடையாளம் கொண்ட ரிப்பன்கள், துண்டு கொடிகள் ஆகியவற்றை பயன்படுத்தவும் தடை விதிப்பதோடு, குறிப்பிட்ட சமுதாயத்திற்கு சார்பாக கோஷங்களை எழுப்பவும் தடைவிதித்து உத்தரவிட வேண்டும்" என கூறியிருந்தார்.