சென்னை: குஜராத் மாநிலத்தில் அரசு ஆரம்பப் பள்ளிகளில் கம்ப்யூட்டர் கல்வி வழங்குவது தொடர்பாக, எவர் ஆன் என்ற நிறுவனத்துடன் ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டது. இந்நிலையில், நிதி நிறுவனம் தரப்பில் தாக்கல் செய்யப்பட்ட வழக்கின் அடிப்படையில், எவர் ஆன் நிறுவனத்தின் சொத்துக்களை நிர்வகிக்க சென்னை உயர் நீதிமன்ற கலைப்பு அதிகாரி நியமிக்கப்பட்டார்.
உயர் நீதிமன்ற உத்தரவின் படி நியமிக்கப்பட்ட கலைப்பு அதிகாரி, எவர் ஆன் நிறுவனத்துக்கு வழங்க வேண்டிய 1 கோடியே 99 லட்சம் ரூபாயில், 1 கோடியே 96 லட்சம் ரூபாயை மட்டும் குஜராத் அரசு வழங்க தயாராக உள்ளதாக உயர் நீதிமன்றத்தில் அறிக்கை அளித்திருந்தார்.
இந்த அறிக்கையின் அடிப்படையில், எவர் ஆன் நிறுவனத்துக்கு செலுத்த வேண்டிய 1 கோடியே 96 லட்சம் ரூபாயை, 2017ம் ஆண்டு முதல் 9 சதவீத வட்டியுடன் சேர்த்து கலைப்பு அதிகாரிடம் செலுத்த குஜராத் மாநில அரசுக்கு சென்னை உயர் நீதிமன்ற தனி நீதிபதி உத்தரவிட்டுள்ளார். இந்த உத்தரவை எதிர்த்து குஜராத் மாநில தலைமைச் செயலாளர், பள்ளிக்கல்வித் துறை செயலாளர் தரப்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் மேல் முறையீடு வழக்கு தாக்கல் செய்யப்பட்டது.