சேலம்:மேட்டூர் அணையிலிருந்து காவிரி உபரிநீரை நீரேற்றங்கள் மூலம் ஏரிகளுக்கு வழங்கும் திட்டத்தின் கீழ் சேலம் மாவட்டம், மேட்டூர் வட்டம், திப்பம்பட்டி நீரேற்று நிலையத்திலிருந்து மின் மோட்டார்கள் மூலம் நீரேற்று செய்யப்பட்டு ஏரிகளுக்கு வழங்கப்படுவதை மாவட்ட ஆட்சியர் பிருந்தாதேவி தொடங்கி வைத்தார்.
அதனைத் தொடர்ந்து செய்தியாளர்களைச் சந்தித்த மாவட்ட ஆட்சியர் பிருந்தாதேவி, "சேலம் மாவட்டம், மேட்டூர் அணை தனது முழு கொள்ளளவான 120 அடியினை எட்டியுள்ள நிலையில், தமிழ்நாடு முதலமைச்சரின் ஆணைக்கிணங்க, இன்று மேட்டூர் அணையிலிருந்து காவிரி உபரிநீரை நீரேற்று மூலம் ஏரிகளுக்கு வழங்கும் திட்டத்தின் கீழ் மேட்டூர் வட்டம், திப்பம்பட்டி நீரேற்று நிலையத்திலிருந்து மின் மோட்டார்கள் மூலம் நீரேற்று செய்யப்பட்டு ஏரிகளுக்கு வழங்குவது தொடங்கி வைக்கப்பட்டுள்ளது.
மேட்டூர் அணையின் வெள்ள நீரை சேலம் மாவட்டம், சரபங்கா வடிநிலத்தில் உள்ள வறண்ட ஏரிகளுக்கு நீரேற்றம் மூலம் நீர் வழங்கும் திட்டம் ரூ.673.88 கோடி மதிப்பீட்டில் தமிழ்நாடு அரசால் செயல்படுத்தப்பட்டுள்ளது. இத்திட்டத்தில் மேட்டூர் அணையானது அதன் முழு கொள்ளளவான 120 அடியினை எட்டும் பொழுது அணையின் இடது கரையின் நீர் பரப்பு பகுதியிலிருந்து வெள்ள நீரை திப்பம்பட்டி பிரதான நீரேற்று நிலையம், வெள்ளாளபுரம் துணை நீரேற்று நிலையம், கன்னந்தேரி துணை நீரேற்று நிலையம் மூலமாக 82 ஏரிகள், குளம் போன்ற நீர்நிலைகளைச் சென்றடையும் வகையில் இத்திட்டம் செயல்படுத்தப்பட்டுள்ளது.