தேனி: தேனி மாவட்டத்தைச் சேர்ந்த பூதிப்புரம் பேரூராட்சி மஞ்சுநாயக்கன்பட்டி, வாழையாத்துப்பட்டி, ஆதிப்பட்டி உள்ளிட்ட கிராமங்களை உள்ளடக்கிய பேரூராட்சியாக இயங்கி வருகின்றது. இந்நிலையில் பூதிப்புரம் பேரூராட்சி உட்பட்ட பகுதிகளில் மளிகைக் கடை உள்ளிட்ட பல்வேறு விற்பனைக் கடைகள் வைத்திருக்கும் வியாபாரிகளிடம் பூதிப்புரம் பேரூராட்சி நிர்வாகம் சார்பில் பிளாஸ்டிக் பைகள் இருக்கின்றதா என்று தொடர்ந்து சோதனைகள் மேற்கொள்ளப்பட்டு அபராதம் விதிக்கப்பட்டு வருவதாக வியாபாரிகள் குற்றம் சாட்டி வந்தனர்.
இந்நிலையில் பூதிப்புரம் பேரூராட்சி நிர்வாகத்தைக் கண்டித்து அப்பகுதியில் கடை வைத்திருக்கும் வணிகர்கள் இன்று(பிப்.17) பேரூராட்சி அலுவலகத்தை முற்றுகையிட்டு நிர்வாக அலுவலர்களிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இது குறித்து அப்பகுதியைச் சேர்ந்த வணிகர் கூறுகையில், "பேரூராட்சி சார்பில் 10 நபர்கள் அடிக்கடி கடைகளுக்கு வந்து பிளாஸ்டிக் பைகள் சோதனை செய்கின்ற பெயரில் கடைகளில் உள்ள பொருட்களைச் சேதப்படுத்தி 10 நாட்களுக்கு ஒரு முறை அபராதம் விதிக்கின்றனர். தொடர்ந்து இவ்வாறு சோதனை மேற்கொள்வது எங்களைச் சிரமத்திற்கு உள்ளாக்குகின்றது" என்று குற்றம் சாட்டினார்.