திருச்சி:திருச்சி மலைக்கோட்டை தாயுமான சுவாமி கோயிலில் விநாயகர் சதுர்த்தி விழா சிறப்பாக செப்டம்பர் 7 முதல் செப்டம்பர் 20ஆம் தேதி வரை நடைபெறுகிறது. விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு மாணிக்க விநாயகருக்கும், உச்சி விநாயகருக்கும் காலை 10.00 மணிக்கு மேல் தலா 75 கிலோ என 150 கிலோ எடையில் கொழுக்கட்டைகள் கொண்டு நைவேத்தியம் செய்யப்படுகிறது.
இந்த கொழுக்கட்டை பச்சரிசி மாவு, உருண்டை வெல்லம், ஏலக்காய், ஜாதிக்காய், எள்ளு, நெய், தேங்காய் ஆகிய பொருட்களைக் கொண்டு கோயிலின் மடப்பள்ளியில் தயாரிக்கப்பட்டது. மேலும் 2004ஆம் ஆண்டு முதல் பெரிய கொழுக்கட்டை தயார் செய்து படையல் செய்யும் வழக்கம் இருந்து வருகிறது.
மேலும் இந்த பெரிய கொழுக்கட்டையானது நிவேத்தியம் செய்யப்பட்டு பக்தர்களுக்கு விநியோகம் செய்யப்படும்.இந்நிலையில் இன்று தொடங்கி 14 தினங்கள் நடைபெறும் திருவிழாவில் உச்சிப்பிள்ளையார், மாணிக்க விநாயகர் சன்னதி மூலவருக்கு தினந்தோறும் சந்தனகாப்பு அலங்காரம் நடைபெறும். அதேபோல் மாலை பக்தி இன்னிசை நிகழ்ச்சி நாட்டிய நிகழ்ச்சி ஆன்மீக சொற்பொழிவு போன்ற கலைநிகழ்ச்சிகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
இதற்கிடையே மாணிக்க விநாயகர் உற்சவர் திருவிழா நாட்களில் மாலை 4 மணிக்கு பாலகணபதி, நாகாபரண கணபதி, லெஷ்மி கணபதி, தர்பார் கணபதி, பஞ்சமுக கணபதி, மூஷிக கணபதி, ராஜகணபதி, மயூர கணபதி, குமார கணபதி, வல்லப கணபதி, ரிஷபாரூடர்கணபதி, சித்திபுத்தி கணபதி மற்றும் நர்த்தன கணபதி ஆகிய பல்வேறு விஷேச அலங்காரங்களில் பக்தர்களுக்கு காட்சி தருவார்.