சென்னை: சென்னை தலைமைச் செயலகத்தில், தலைமைச் செயலாளர் சிவ் தாஸ் மீனா தலைமையில், தடையில்லாமல் குடிநீர் வழங்குவது மற்றும் கோடை காலத்தில் குடிநீர் பற்றாக்குறை ஏற்படாமல் சமாளிப்பது தொடர்பான ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.
காணொலிக் காட்சி வாயிலாக நடைபெறக்கூடிய இந்த ஆலோசனைக் கூட்டத்தில், 12 மாவட்ட ஆட்சித் தலைவர்கள் கலந்து கொண்டுள்ளனர். இதன்படி, சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு ஆகிய மாவட்டங்களில் குடிநீர் சீராக வழங்குவது தொடர்பாகவும், புதுக்கோட்டை, ராமநாதபுரம், சிவகங்கை, தென்காசி, தூத்துக்குடி, விருதுநகா் ஆகிய மாவட்டங்களில் 24 வட்டங்களில் ஏற்பட்ட வறட்சி பாதிப்பு தொடர்பாக ஆலோசிக்கப்பட்டு வருகிறது.
மேலும், வெப்பத்தின் தாக்கம் அதிகரித்து வரும் நிலையில், ஏரிகள் மற்றும் குளங்களில் நீர் இருப்பு சற்று குறையத் தொடங்கியுள்ளது. இந்த நிலையில், கோடை காலத்தில் ஏற்படும் குடிநீர் பற்றாக்குறையைச் சமாளித்து, தடையில்லாமல் குடிநீர் வழங்குவது, நிலுவையில் உள்ள கூட்டுக் குடிநீர் திட்டம், செயல்படுத்தப்பட உள்ள கடல் நீரை குடிநீராக்கும் திட்டம் உள்ளிட்ட திட்டங்களுக்கான முன்னுரிமை குறித்து ஆலோசிக்கப்பட்டு வருகிறது.
இந்தக் கூட்டத்தில் நகராட்சி நிர்வாகத்துறை முதன்மைச் செயலாளர் கார்த்திகேயன், ஊரக வளர்ச்சித் துறை முதன்மைச் செயலாளர் செந்தில்குமார் மற்றும் அரசுத்துறை செயலாளர்கள் கலந்து கொண்டுள்ளனர்.
இதையும் படிங்க:மக்களவைத் தேர்தல் 2-ம் கட்ட வாக்குப்பதிவு; பிறமாநிலத் தொழிலாளர்களுக்கு ஊதியத்துடன் கூடிய விடுமுறை அளிக்க உத்தரவு! - Lok Sabha Election 2024