பாதிக்கப்பட்டவர்கள் கண்ணீர் மல்க பேட்டி தஞ்சாவூர்: கும்பகோணம் அருகே திருவள்ளியங்குடி ஊராட்சியில், ஏற்கனவே பல ஆண்டுகளுக்கு முன்பு உயிரிழந்த நான்கு பேர்கள் மற்றும் இத்திட்டத்தில் வீடே கேட்காத மூன்று பேர்களின் பெயரில் வீடு கட்டு அனுமதி அளிக்கப்பட்டு, வேறு நபர்களின் வங்கி கணக்குகளில் பணம் செலுத்தப்பட்டு மோசடி, பாதிக்கப்பட்ட 3 பேர் உயர்நீதிமன்ற மதுரைக்கிளையில் இன்று (ஜன.20) வழக்கு தொடர்ந்துள்ளனர்.
கும்பகோணம் அருகே திருவிடைமருதூர் வட்டம், திருப்பனந்தாள் ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்டது திருவள்ளியங்குடி ஊராட்சி. இவ்வூராட்சியில், திருவள்ளியங்குடி, பாலாக்குடி, அணியமலை மற்றும் 51 சாத்தனூர் ஆகிய நான்கு கிராமங்களை உள்ளடக்கியதாகும். இந்த ஊராட்சி மன்ற தலைவராக திமுகவைச் சேர்ந்த எஸ்.அழகர் கடந்த 2019ஆம் ஆண்டு டிசம்பர் முதல் இருந்து வருகிறார். இவ்வூராட்சி செயலர் (எ) ஊராட்சி எழுத்தராக ராஜ்குமார் 15 ஆண்டுகளுக்கும் மேலாக இருந்து வருவதாக தெரிகிறது.
இந்நிலையில், 2023-ல் திருவள்ளியங்குடி கிராமத்தை சேர்ந்த பாண்டியன் என்பவர், தனக்கு பிரதம மந்திரி ஆவாஸ் யோசனா கிராமின் திட்டத்தின் கீழ் தன்னை சேர்த்து தனக்கு வீடு கட்ட உதவ வேண்டும் என மனு அளித்த போது, அவருக்கு அதிர்ச்சியளிக்கும் வகையில், தங்களது பெயருக்கு ஏற்கனவே இந்த திட்டத்தில் வீடு கட்ட அனுமதி அளிக்கப்பட்டு அதற்கான தொகையும் வங்கி கணக்கிற்கு அனுப்பி வைக்கப்பட்டதாக வாய்மொழி தகவல் கிடைத்து.
இதனால் அதிர்ச்சியடைந்த அவர், எப்படி தான் விண்ணப்பிக்காத நிலையில், தன் பெயரில் யார் விண்ணப்பம் அளித்தது? அதற்கான பணம் யாருக்கு எப்போது? எப்படி சென்றது? என்பது தெரியாமல் குழம்பிப் போனார். அதேபோல, அதே ஊரை சேர்ந்த சண்முக வடிவேல் என்பவர் உதவியோடு இது குறித்து இவ்வூராட்சிகளில், இத்திட்டத்தின் கீழ் வீடு கட்ட அனுமதிக்கப்பட்ட நபர்களின் தரவுகளை தகவல் அறியும் உரிமை சட்டத்தின் கீழ்(RTI), பெறப்பட்ட போது மேலும் அதிர்ச்சி காத்திருந்தது.
ஆர்டிஐ மூலம் கிடைத்த தகவல் ஆர்டிஐ மூலம் கிடைத்த தகவல் அதில், திருவள்ளியங்குடியை சேர்ந்த பல ஆண்டுகளுக்கு முன்பு உயிரிழந்த 4 நபர்களின் பெயர்கள் இடம் பெற்றிருந்தது. அதாவது மகாலிங்கம் என்பவரது மனைவி அலமேலு, பஞ்சவர்ணம், ஜெயராமன் மற்றும் ரவிச்சந்திரன் ஆகியோர் உயிரிழந்து பல ஆண்டுகள் கடந்தன. இந்நிலையில், 2019-ல் அவர்களுக்கு வீடு கட்ட அனுமதி அளிக்கப்பட்டதாக தரவு கூறுகிறது, அதுமட்டுமின்றி, வீடே இதுவரை கேட்காத, திருவள்ளியங்குடி பாண்டியன்(54) என்பவரது பெயரில் ஒதுக்கீடு பெற்ற வீட்டிற்கான தொகை, சாத்தனூரைச் சேர்ந்த கிருத்திகா என்பவரது வங்கி கணக்கில்ரூ.1 லட்சத்து 20 ஆயிரம் செலுத்தப்பட்டுள்ளது. அதுபோல, வீடு கேட்காத தியாகராஜன்(71) என்பவருக்காக ஒதுக்கப்பட்ட தொகை ரூ.1 லட்சத்து 20 ஆயிரம்சாத்தனூரைச் சேர்ந்த நடனசபாபதி என்பவரின் வங்கி கணக்கிற்கும் சென்றுள்ளது.
3வதாக வினோத் என்பவரின் தந்தை முருகன் 2016-ல் இறந்துபோன நிலையில், அவரது பெயரிலும் வீடு ஒதுக்கீடு வழங்கப்பட்டு அவருக்கான தொகை சாத்தனூரைச் சேர்ந்த தேவிகா என்பவரின் வங்கி கணக்கிற்கு, ரூ.1 லட்சத்து 20 ஆயிரம் அனுப்பப்பட்டுள்ளது தெரியவந்தது. மேலும், இறந்துபோன 4 பேர் பெயரில் ஒதுக்கீடு பெற்ற தொகை யார் யார் வங்கி கணக்கிற்கு தொகை சென்றுள்ளன? என்பது தெரியவில்லை.
இவ்வூராட்சியில் கடந்த 4 ஆண்டுகளில் இதுவரை, 36 வீடுகளுக்கு அனுமதிக்கப்பட்டு தொகை வழங்கப்பட்டதாக ஆவணங்களில் குறிப்பிடப்பட்டுள்ளதாக தெரியவருகிறது. ஆனால், இதில் எவ்வளவு வீடுகள் உண்மையில் உரிய நபர்களால் கட்டப்பட்டுள்ளன என்பது உரிய அலுவலர்கள் நேரடியாக கள ஆய்வு செய்தால்தான் தெரியவரும். இது இந்த ஒரு ஊராட்சியில் உள்ள 4 கிராமங்களில் உள்ள ஒரு கிராமத்தின் நிலை மட்டுமே.
இந்நிலையில் கடந்த 4 ஆண்டுகளில், திருப்பனந்தாள் ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட 44 ஊராட்சிகளிலும், மத்திய அரசின் பிரதமர் வீடு வசதி திட்டத்தின் கீழ், 544 வீடுகளுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளதாக தெரியவருகிறது. இதில், எத்தனை வீடுகள் உண்மையான நபர்களால் கட்டுப்பட்டு தற்போது அந்த வீடு உள்ளது? என கேள்வியை எழுப்பியுள்ளது. இதனால் இவ்வூராட்சி ஒன்றியத்தில் மட்டும் இந்த மத்திய அரசின் இந்தவொரு திட்டத்தில் மட்டும் பல கோடி ரூபாய் அளவிற்கு ஊழல் மற்றும் முறைகேடுகளில் ஊரக வளர்ச்சித்துரை அலுவலர்கள் மற்றும் ஊர் மக்கள் சிலரும் கைக்கோர்த்துக் கொண்டு நடந்திருப்பது வெளிச்சத்திற்கு வந்துள்ளது.
இது தவிர, இத்திட்டத்தில் வீடு ஒதுக்கீடு பெறும் நபர்களிடமிருந்து ரூ.20 ஆயிரம் முதல் ரூ.30 வரை கையூட்டும் பெறப்படுகிறது என்பது கூடுதல் வேதனை. இதுகுறித்து தமிழக அரசு, தஞ்சை மாவட்ட நிர்வாகம், ஊரக வளர்ச்சித்துறை விரிவான நேரடி கள ஆய்வில் இறங்கினால், மேலும் பல திடுக்கிடும் தகவல்கள் வெளிவரும் என்பது மட்டும் உறுதி. பாதிக்கப்பட்ட அன்றாட கூலித் தொழிலாளர்களான ஏழைகளால் இப்பிரச்னையை கையில் எடுத்துக்கொண்டு நீண்ட நாட்கள் போராட முடியாது என தெரிந்து இந்த இழிவான செயலில் ஒரு கும்பல் இப்படி மோசடி செய்துள்ளது.
இதற்கிடையே, பாதிக்பப்பட்ட நபர்களான பாண்டியன், தியாகராஜன், வினோத் ஆகிய மூவர் இதுகுறித்து தங்களுக்கு நீதி வேண்டி, திருப்பனந்தாள் ஊராட்சி ஒன்றிய அலுவலகம், தஞ்சை மாவட்ட ஆட்சியர், தமிழக 'முதல்வர் தனிப்பிரிவு' எனப் புகார் அளித்தும் நடவடிக்கை இல்லாததால் கடைசியாக உயர்நீதிமன்ற மதுரைக்கிளைக்கு இப்பிரச்னை கொண்டு செல்லப்பட்டது.
இதையடுத்து உயர்நீதிமன்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் இது குறித்த புகாரினை விசாரித்து 3 மாத கால அவகாசத்தில் நீதிமன்றத்தில் அறிக்கை தாக்கல் செய்யவும், அதன் பிறகு 12 மாதங்களில் இவ்வழக்கிற்கு தீர்வு காணவும் உத்தரவிட்டுள்ளார். ஏழைகளின் முன்னேற்றத்திற்காக மத்திய அரசு வீடு வழங்கும் திட்டங்களை செயல்படுத்தி வரும் நிலையில், சில சமூக விரோதிகள் ஏழைகளின் வயிற்றில் அடிக்கும் செயலாக இத்தகைய முறைகேடுகளில் ஈடுபடுகின்றனர். இதன் மூலம் அரசால் ஓட்டையான கூரைவீடுகளில் வசிக்கும் ஏழைகளுக்கு கிடைக்க வேண்டிய பலன்களை சட்டவிரோதமாக தட்டிப் பறித்துக் கொண்டவர்கள் மீது தக்க நடவடிக்கை எடுக்க வேண்டுமென சமூக ஆர்வலர்கள் அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.
இது மத்திய அரசின் திட்டம் என்பதால், இதில் மத்திய அரசும் தன் பங்கிற்கு, நேரடி கள ஆய்வு செய்து உண்மையை வெளிக்கொண்டு வந்து, குற்றவாளிகளை கைது செய்து தண்டிக்கவேண்டும். அத்துடன், உடனடியாக முறைகேட்டில் மோசடியாக பெற்ற தொகையை உரிய அபராதத்துடன் அவர்களிடமிருந்து வசூலித்து உண்மையான ஏழை எளிய மக்களுக்கு இந்த திட்டத்தின் பயனடையவும் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதே அப்பகுதி பொதுமக்களின் கோரிக்கையாகும்.
இந்த ஊராட்சியில் மட்டுமல்லாது, இது போன்று திருப்பனந்தாள் ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட 44 ஊராட்சிகளில் 500க்கும் மேற்பட்ட வீடுகள் கட்ட அனுமதி அளிக்கப்பட்டுள்ளதிலும் பெரும் ஊழலும் முறைகேடுகளும் நடைபெற்று இருக்க கூடுமோ என்ற சந்தேகம் எழுந்துள்ளது. இந்து ஊழல் முறைகேடுகளில், சம்பந்தப்பட்ட ஊரக பகுதி மக்கள் பிரதிநிதிகளுடன், அரசுத்துறை அலுவலர்களும் இணைந்து கைகோர்த்து செய்துள்ள இந்த மோடி மட்டும் ரூபாய் 7 கோடி வரை இருக்ககூடும் என தெரியவருகிறது. தற்போது இது குறித்து ஆடியோ பதிவு ஒன்று சமூக வலைதளங்களில் வைரலாக பரவி அனைவரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.
இதனிடையே, இந்த திருவிடைமருதூர் தொகுதி அரசு தலைமை கொறடா கோ.வி.செழியனின் தொகுதி என்பது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க: "ஒரே பாரதம் உன்னத பாரதம்"- தமிழ்நாடு சொந்த ஊரை போல் உணர்த்தும் - கேலோ இந்தியா தொடக்க விழாவில் மோடி பேச்சு!