சென்னை:தமிழ்நாட்டில் உள்ள அரசு மற்றும் தனியார் மருத்துவக் கல்லூரிகளில் உள்ள எம்பிபிஎஸ், பிடிஎஸ் படிப்பில் மாணவர்கள் சேர்வதற்கான ஸ்ட்ரே வேகன்ஸி எனப்படும் இறுதிச்சுற்றுக் கலந்தாய்வு துவங்கி உள்ளது.
இது குறித்து மருத்துவக் கல்வி மாணவர் சேர்க்கைக்குழு வெளியிட்டுள்ள அறிவிப்பில், "எம்பிபிஎஸ் படிப்புக்கான ஸ்ட்ரே வேகன்ஸி சுற்று கலந்தாய்வில் பங்கேற்பதற்கு ரூ.5 லட்சம் கூடுதல் வைப்புத் தொகை செலுத்த வேண்டும், பிடிஎஸ் படிப்புகளுக்கு ரூ.2 லட்சம் செலுத்த வேண்டும். கலந்தாய்வில் இடங்கள் தேர்வு செய்துவிட்டு சம்பந்தப்பட்ட கல்லூரிகளில் சேராதவர்களுக்கு அந்தத் தொகை திருப்பி அளிக்கப்பட மாட்டாது. அதே வேளையில் ஒதுக்கீடு பெற்ற கல்லூரியில் சேருபவர்களுக்கு கல்வி கட்டணத்தில் அந்த தொகை கழித்து கொள்ளப்படும்.
மருத்துவப் படிப்பிற்கான இடத்தை தேர்வு செய்வதற்கு முன்னர் மாணவர்கள் கவனமாக செயல்பட வேண்டும். கலந்தாய்வில் இடங்கள் பெற்று கல்லூரிகளில் சேராமல் இருப்பதால் ஏற்படும் காலியிடங்களை தவிர்ப்பதற்காக இத்தகைய நடவடிக்கை எடுக்கப்பட்டு இருக்கிறது. மேலும், மாணவர்களுக்கு வைப்புத்தொகை , கல்விக் கட்டணம் திருப்பி தரப்படாது எனவும், இளநிலை நீட் தேர்வினை எழுதுவதற்கு ஒராண்டு தடை விதிக்கப்படும் எனவும் தெரிவித்துள்ளது.
MBBS, BDS படிப்புகளில் அகில இந்திய ஒதுக்கீடு மற்றும் தமிழ்நாடு ஒதுக்கீட்டில் கலந்துக் கொண்டு இடங்களையும் பெறாதவர்கள் ஆன்லைனில் பங்கேற்கலாம். MBBS அல்லது BDS இடங்களிலும் ஏற்கனவே சேர்ந்துள்ள மாணவர்கள் மற்றும் இடங்களை தேர்வு செய்தும் சேராத மாணவர்கள் பங்கேற்க முடியாது," எனக் கூறப்பட்டுள்ளது.
காலியிடங்கள் விவரம் (Credit - TN Health Dept) அமைச்சர் விளக்கம்:இது குறித்து மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா சுப்பிரமணியனிடம் கேட்டப்போது, "MBBS , BDS படிப்பிற்கு தற்பொழுது 4வது சுற்று கலந்தாய்வு நடைபெற்று வருகிறது. இதில் அரசு ஒதுக்கீட்டில் அரசு மருத்துவக் கல்லூரி பொறுத்தவரையில் எம்.பி.பி.எஸ் படிப்பில் ஒரு காலியிடம் , BDS பொறுத்தவரை 23 இடங்கள், 7.5 சதவீதம் உள் ஒதுக்கீட்டில் தனியார் BDS இடங்கள் 4 காலியாக உள்ளது.
MBBS சுயநிதி கல்லூரிகளில் 67 இடங்களும், தனியார் பல்கலைக்கழகங்களில் 61 இடங்களும், பல் மருத்துவக் கல்லூரிகளை பொறுத்தவரை அரசு கல்லூரிகள் 23 இடங்களும், சுயநிதி கல்லூரிகளில் 13 இடங்களும் ஆக மொத்தம் 296 காலியிடங்கள் உள்ளன. இன்று 4 ஆவது சுற்று கலந்தாய்வு தொடங்கப்பட்டுள்ளது. கலந்தாய்வு வரும் 28.10.2024 முடிந்து 29.10.2024 அன்று பட்டியல் இறுதி செய்யப்பட்டு வரும் 5.11.2024-க்குள் மாணவர் சேர்க்கை முடிவடையும்.
அனைத்து இடங்களும் நிரப்புவதற்கு ஏதுவாக கலந்தாய்வு நடத்தப்பட்டுள்ளது. அன்னை மருத்துவக் கல்லூரியில் உச்சநீதிமன்றத்தில் வழக்கு நிலுவையில் இருந்ததால் 50 இடங்கள் உள்ளது. அதனை நிரப்புவதற்கு தேசிய மருத்துவ ஆணையத்திற்கு அனுமதிக்கேட்டு கடிதம் அனுப்பப்பட்டுள்ளது. மாணவர்களுக்கான வைப்பு நிதி இடத்தில் சேர்ந்து விட்டால் மீண்டும் திருப்பித் தரப்படும்.
கலைஞர் நூற்றாண்டு பன்னோக்கு மருத்துவமனையில் ஒராண்டில் பல்வேறு பணிகள் மேற்காெள்ளப்பட்டு வருகிறது. கலைஞர் நூற்றாண்டு மருத்துவமனையில் மருத்துவம் சார்ந்து படிப்புகளில் 160 இடங்கள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. மருத்துவமனை துவக்கப்பட்ட குறுகிய காலத்தில் மருத்துவப்படிப்பு துவங்குவதற்கு அனுமதி கிடைத்துள்ளது வரவேற்கத்தக்கது. பிற மருத்துவமனைகளில் உள்ள கட்டமைப்புகளை பொறுத்து துவக்குவதற்கு நடவடிக்கை எடுக்கப்படும்" என தெரிவித்தார்.