தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

அதிக கட்டணம் வசூல்? போராட்டம் நடத்திய தனியார் கல்லூரி மாணவர்கள் சஸ்பெண்ட்! - Thiruverkadu College issue - THIRUVERKADU COLLEGE ISSUE

Thiruverkadu College issue: திருவேற்காடு தனியார் கல்லூரி நிர்வாகத்தை கண்டித்து போராட்டத்தில் ஈடுபட்ட எம்பிஏ மாணவர்கள் 14 பேர் சஸ்பெண்ட் செய்யப்பட்டதால் மாணவர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

SAVEETHA COLLEGE
SAVEETHA COLLEGE (Credit - ETV Bharat Tamil Nadu)

By ETV Bharat Tamil Nadu Team

Published : Jun 1, 2024, 6:23 PM IST

சென்னை: திருவேற்காடு அடுத்த வேலப்பன்சாவடி பகுதியில் சவிதா பல்கலைக்கழகத்திற்குs சொந்தமான கல்லூரி இயங்கி வருகிறது. இந்த பல்கலைக்கழகத்தில் பொறியியல், சட்டம், மருத்துவம், பல் மருத்துவம் உள்ளிட்ட ஏராளமான கல்லூரிகள் இயங்கி வருகின்றன.

இந்த கல்லூரிகளில் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் ஆந்திரா, கர்நாடகா, கேரளா உள்ளிட்ட இந்தியாவின் பல்வேறு மாநிலங்களில் இருந்தும் மாணவ, மாணவிகள் சேர்ந்து தங்கி படித்து வருகின்றனர். இந்த நிலையில், இங்கு எம்பிஏ படித்து வரும் மாணவ, மாணவிகள் நேற்று வகுப்புகளை புறக்கணித்து விட்டு, கல்லூரி நுழைவாயிலில் திடீரென ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

அதுகுறித்து அவர்கள் தெரிவிக்கையில், “எம்பிஏ முதலாம் ஆண்டு படித்து வரும் மாணவர்கள் கல்விக் கட்டண தொகையாக மூன்று லட்சம் ரூபாய் வரை கட்டியுள்ளனர். கல்லூரி நிர்வாகம் கூறியதன் பேரில், அவர்கள் கூறிய வங்கிக் கணக்கில் பணமாகவும், காசோலையாகவும், ஆன்லைனிலும் பணத்தைச் செலுத்தியுள்ளனர்.

ஆனால், தற்போது ஒவ்வொரு மாணவருக்கும் ரூ.50,000 முதல் ரூ.2 லட்சம் வரை கல்விக் கட்டண நிலுவைத்தொகை இருப்பதாகவும், அதனை உடனடியாக கட்ட வேண்டும் எனவும், கட்டணத்தைச் செலுத்தினால் மட்டுமே வகுப்புகள் நடத்தப்படும் என்று கல்லூரி நிர்வாகம் சார்பில் தெரிவித்துள்ளனர். இதனைக் காரணம் காட்டி, கடந்த இரண்டு வாரங்களாக வகுப்புகள் எதுவும் நடத்தப்படவில்லை” எனத் தெரிவித்தனர்.

இதனால் ஆத்திரமடைந்த மாணவர்கள் நேற்று வகுப்புகளை புறக்கணித்து கல்லூரி முன்பாக ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டதாக தெரிவித்தனர். பின்னர் இது குறித்த தகவல் அறிந்த திருவேற்காடு போலீசாரும், கல்வாரி நிர்வாகத்தினரும், மாணவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினர். அதனைத் தொடர்ந்து மாணவர்கள் கலைந்து சென்றனர்.

இந்நிலையில், நேற்று போராட்டத்தில் ஈடுபட்ட மாணவர்கள் 14 பேரை கல்லூரி நிர்வாகம் 10 நாட்களுக்கு சஸ்பெண்ட் செய்து உத்தரவிட்டுள்ளது. இதுகுறித்து கல்லூரி நிர்வாகம் நோட்டீஸில் அதற்கான அறிவிப்பையும் வெளியிட்டுள்ளது. மேலும், பல மாணவர்களை சஸ்பெண்ட் செய்ய கல்லூரி நிர்வாகம் முடிவு செய்து இருப்பதாகவும் தகவல் வெளியாகி உள்ளது.

இதனால் மாணவர்கள் தங்களது போராட்டத்தை பெரிய அளவில் எடுத்துச் செல்வது குறித்து ஆலோசனை செய்து வருகின்றனர். இது தொடர்பாக பல்வேறு மாணவ அமைப்புகள், அரசு அதிகாரிகளை தொடர்பு கொண்டு மாணவர்கள் புகார் தெரிவித்துள்ளனர். இந்த நிலையில், கல்லூரி மாணவர்கள் பயன்படுத்தி வந்த இணையதளத்தையும் கல்லூரி நிர்வாகம் தற்காலிகமாக முடக்கி வைத்திருப்பது மாணவர்களிடம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

கல்லூரி நிர்வாகம் கூறியதன் பேரில், மாணவர்கள் பணம் செலுத்திய நிலையில் மாணவர்களின் கல்விக் கட்டணத்தை எடுத்துக்கொண்டு தலைமறைவாக உள்ள இரண்டு ஊழியர்கள் மீது கல்லூரி நிர்வாகம் சார்பில் ஆவடி மத்திய குற்றப்பிரிவு போலீசில் புகார் அளித்துள்ள நிலையில் அது குறித்த விசாரணை நடைபெற்று வருகிறது.

இதையும் படிங்க: பேச்சும் சரியில்ல'.. டிடிஎஃப் வாசனை தொடர்ந்து விஜே சித்து மீது புகார்!

ABOUT THE AUTHOR

...view details