தமிழ்நாடு

tamil nadu

By ETV Bharat Tamil Nadu Team

Published : Jun 8, 2024, 1:48 PM IST

ETV Bharat / state

தேசிய குத்துச்சண்டை போட்டிக்கு தகுதி பெற்ற நரிக்குறவர் சமுதாய மாணவர்..தேடி சென்று உதவிய தன்னார்வ அமைப்பினர்! - boxing competition

Bharathimohan Trust: தேசிய அளவிலான குத்துச்சண்டை போட்டிக்கு தகுதி பெற்ற நரிக்குறவ சமூகத்தைச் சேர்ந்த மாணவனுக்கு மயிலாடுதுறையைச் சேர்ந்த தன்னார்வ அமைப்பினர் நிதி வழங்கி பாராட்டு தெரிவித்துள்ளனர்.

மாணவனுக்கு உதவிய தன்னார்வ அமைப்பினர்
மாணவனுக்கு உதவிய தன்னார்வ அமைப்பினர் (Credit - ETV Bharat Tamil Nadu)

மயிலாடுதுறை:மயிலாடுதுறையை அடுத்த திருஇந்தளூர் ஊராட்சி பல்லவராயன்பேட்டை கிராமத்தில் 100-க்கு மேற்பட்ட நரிக்குறவ சமுதாய குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இச்சமூகத்தைச் சேர்ந்த மாணவர்கள் பயன்பெறும் வகையில் குடியிருப்புக்கு உள்ளேயே தனியார் அறக்கட்டளை ஒன்றின் சார்பில் 'சுபாஷ் சந்திரபோஸ்' என்ற பெயரில் உண்டு உறைவிடப் பள்ளி அமைக்கப்பட்டு, நரிக்குறவ சமூகத்தைச் சேர்ந்த மாணவர்களுக்கு 8-ஆம் வகுப்புவரை இலவசமாக கல்வி வழங்கப்பட்டு வருகிறது.

அதன்பின்னர் கல்வியைத் தொடர மாணவர்களுக்கு அறக்கட்டளை சார்பில் தேவையான உதவிகள் செய்யப்பட்டு வருகிறது. மேலும், விளையாட்டுத் துறையில் ஆர்வம் உள்ள மாணவர்களை ஊக்குவிக்கும் வகையில் இந்த பள்ளியில் பணியாற்றி வரும் உடற்கல்வி ஆசிரியர் ஆசைதம்பி மாணவர்களின் திறமைகளைக் கண்டுபிடித்து குத்துச்சண்டை பயிற்சி அளித்து வெளிக்கொண்டு வந்துள்ளார்.

இப்பகுதி மாணவர்களை பல்வேறு மாவட்டங்கள், மாநிலங்களுக்கு அழைத்துச் சென்று குத்துச்சண்டை போட்டிகளில் கேடயங்கள், பதக்கங்களும் வென்றுள்ளனர். மேலும் இந்த உறைவிடப் பள்ளியில் படித்தவர்களில் இதுவரை 23 மாணவ மாணவிகள் பட்டப்படிப்பை முடித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

அந்த வகையில், தற்போது நடந்து முடிந்த பன்னிரண்டாம் வகுப்பு பொதுத் தேர்வில் வீரசிவாஜி என்ற மாணவர் 303 மதிப்பெண் பெற்று தேர்ச்சி பெற்றுள்ளார். மேலும் பள்ளிக்கல்வித்துறை சார்பில் தஞ்சாவூர், தர்மபுரி உள்ளிட்ட மாவட்டங்களில் நடைபெற்ற குத்துச்சண்டை போட்டிகளில் பதக்கங்களை வென்று,

தற்போது ஜம்மு - காஷ்மீர் மாநிலத்தில் நடைபெறவுள்ள தேசிய அளவிலான 4-வது நேஷனல் சாம்பியன்ஷிப் குத்துச்சண்டை போட்டிக்கு தேர்வு செய்யப்பட்டுள்ளார். வருகின்ற ஜூன் 11, 12 மற்றும் 13 ஆகிய தேதிகளில் இந்த போட்டியானது நடைபெறவுள்ளது.

இந்தநிலையில் மாணவன் வீரசிவாஜி ஜம்மு - காஷ்மீர் சென்று விளையாட போதுமான நிதியில்லாமல் மாணவன் செய்வதறியாமல் திகைத்துள்ளார். இதனையறிந்த 'பாரதிமோகன் அறக்கட்டளை' நிறுவனர் பாரதிமோகன் நேற்று (வெள்ளிக்கிழமை) பல்லவராயன்பேட்டை பகுதியில் உள்ள மாணவன் வீரசிவாஜியின் வீட்டுக்கு நேரில் சென்று மாணவனை சந்தித்து சால்வை அணிவித்து வாழ்த்து தெரிவித்தார்.

பின்னர் ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தில் நடைபெறவுள்ள குத்துச்சண்டை போட்டிக்கு சென்று வருவதற்கும் தேவையான உபகரணங்கள் வாங்குவதற்கும் ரூ.11,000 நிதி உதவியும் வழங்கினார்.மேலும் படிப்பு மற்றும் விளையாட்டிற்கும் ஏதேனும் உதவி தேவைப்பட்டால் உடனடியாக தான் செய்து தருவதாகவும் மாணவனுக்கு உறுதி அளித்தார். உதவி தொகை பெற்றுக் கொண்ட மாணவன் பாரதிமோகன் அறக்கட்டளைக்கு நன்றி கூறியதுடன் குத்துச்சண்டை போட்டியில் பங்கேற்று பதக்கம் வெல்வேன் என்றும் மகிழ்ச்சியுடன் தெரிவித்தார்.

இதையும் படிங்க:“பாஜக - தெலுங்கு தேசம் கூட்டணி எத்தனை நாள் நீடிக்கும்?” - கே.பாலகிருஷ்ணன் கேள்வி!

ABOUT THE AUTHOR

...view details