மயிலாடுதுறை:தமிழகத்தில் நீட் தேர்வு தேவையா? இல்லையா? என்ற நீண்ட விவாதம் ஒருபுறம் சென்று கொண்டிருக்கும் நிலையில், அரசியல் கட்சிகள் நீட் தேர்வுக்கு எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில், மிகவும் ஏழ்மையான குடும்பத்தைச் சேர்ந்த மாணவ, மாணவிகள் நீட் தேர்வில் வென்று தங்களது எட்டாக்கனியான மருத்துவக் கனவை எட்டிப் பிடித்துள்ளனர்.
அந்த வகையில், மயிலாடுதுறை அருகே ஆக்கூர் கிராமத்தைச் சேர்ந்த மாணவி சந்திரோதயா, 2 முறை நீட் தேர்வில் தோல்வி அடைந்து 3வது முறையாக தேர்ச்சி பெற்று, நீலகிரி அரசு மருத்துவக் கல்லூரிக்கு தேர்வாகியுள்ளார். மயிலாடுதுறை மாவட்டம், தரங்கம்பாடி தாலுகா ஆக்கூர் கிராமத்தைச் சேர்ந்த கூலித் தொழிலாளிகள் சந்திரசேகர் - விஜயா தம்பதி. இவர்களது மகள் சந்திரோதயா. இவர் ஆக்கூர் அரசு பெண்கள் உயர்நிலைப் பள்ளியில் பத்தாம் வகுப்பு படித்துள்ளார். தொடர்ந்து, 12ஆம் வகுப்பை திருக்கடையூர் அரசு மேல்நிலைப்பள்ளியில் படித்துள்ளார்.
நீட் தேர்வில் 2 முறை தோல்வி:10ஆம் வகுப்பில் 476 மதிப்பெண்கள் மற்றும் 12ஆம் வகுப்பில் 538 மதிப்பெண்கள் பெற்று படித்த 2 பள்ளிகளிலும் முதல் மதிப்பெண் பெற்று தேர்ச்சி பெற்றுள்ளார். தொடர்ந்து, கடந்த 2022-ல் நீட் தேர்வு எழுதியுள்ளார். ஆனால், அதில் அவர் 107 மதிப்பெண்கள் பெற்று தோல்வியடைந்துள்ளார். தொடர்ந்து படித்து 2வது முறை எழுதிய தேர்வில் 254 மதிப்பெண்கள் பெற்று மேலும் தோல்வியைச் சந்தித்துள்ளார்.
விடாமுயற்சி விஸ்வரூப வெற்றி:இண்டு முறை தோல்வியடைந்துவிட்டோம் என மனதை தளரவிடாமல், பெற்றோர் அளித்த ஊக்கத்தினால் 3வது முறை நீட் தேர்வு எழுதி, 497 மதிப்பெண்கள் எடுத்து 7.5 சதவீதம் அரசு உள் ஒதுக்கீட்டில், நீலகிரி அரசு மருத்துவக் கல்லூரியில் தேர்வாகியுள்ளார்.
இது குறித்து மாணவி சந்திரோதயா ஈடிவி பாரத் செய்திகளுக்கு அளித்த சிறப்பு பேட்டியில், “சிறுவயது முதல் மருத்துவராக வேண்டும் என்பது என்னுடைய கனவு. 2 முறை நீட் தேர்வில் தோல்வி அடைந்து, 3வது முறையில் வெற்றி பெற்றுள்ளேன். ஒருமுறை தோற்றுவிட்டால், அதை எண்ணி மனம் தளர விடாமல், தவறான முடிவுகள் எடுக்காமல் கடின உழைப்புடன் மீண்டும் முயற்சி செய்ய வேண்டும்.