மயிலாடுதுறை:தருமபுரம் அரசினர் மகளிர் கலைக் கல்லூரியில் ரூ.4.40 கோடி மதிப்பீட்டில் தரைத்தளம் மற்றும் இரண்டு அடுக்கு மாடியில் நூலகம் கட்ட திட்டமிடப்பட்டு, அதன் அடிக்கல் நாட்டு விழா நேற்று நடைபெற்றது. இதில் மயிலாடுதுறை காங்கிரஸ் எம்.எல்.ஏ ராஜ்குமார் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு, புதிய கட்டிடத்திற்கு அடிக்கல் நாட்டினார்.
நிகழ்ச்சிக்குப் பின்னர், அங்கு வந்த திமுக நகரச் செயலாளரும், நகர்மன்றத் தலைவருமான குண்டாமணி என்கிற செல்வராஜ், நகராட்சி நிர்வாகத்துக்கு தகவல் தெரிவிக்காமல் அடிக்கல் நாட்டியதைக் கண்டித்து, கட்டட ஒப்பந்தக்காரர்களிடம் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டார். மேலும், எம்.எல்.ஏ ராஜ்குமாரை, “நீ காங்கிரஸ் ஓட்டுலயா ஜெயிச்ச? திமுக ஓட்ட வாங்கி தானே ஜெயிச்ச” என பேசினார். இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.
இதனிடையே, இந்த சம்பவத்தைக் கண்டித்து மயிலாடுதுறை மாவட்ட காங்கிரஸ் கட்சி பொறுப்பாளர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில், சீர்காழியில் இன்று காங்கிரஸ் கட்சி மாநில பொதுச் செயலாளரும், முன்னாள் நகர்மன்றத் தலைவருமான கனிவண்ணன் செய்தியாளர்களைச் சந்தித்தார்.
அப்போது அவர் கூறுகையில், “காங்கிரஸ் மாவட்டத் தலைவரும், மூத்த சட்டமன்ற உறுப்பினருமான மயிலாடுதுறை ராஜ்குமாரை, மயிலாடுதுறை திமுக நகரச் செயலாளர் செல்வராஜ் ஒருமையில் தரக்குறைவாக பேசியதை வன்மையாக, வருத்தத்துடன் கண்டிக்கிறோம். இது கட்சித் தொண்டர்கள் மத்தியிலும், கூட்டணி கட்சியினரிடமும் மிகப்பெரிய வருத்தத்தை ஏற்படுத்தி உள்ளது.