திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயில் தேரோட்டம் தூத்துக்குடி: முருகப் பெருமானின் அறுபடை வீடுகளில் 2ஆம் படை வீடாக விளங்குவது திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி திருக்கோயில். இங்கு மாசித்திருவிழா கடந்த பிப்.14ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கி வெகு விமர்சையாக நடைபெற்று வருகிறது.
இந்நிலையில், மாசித் திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியான தேரோட்ட பவனி, இன்று (பிப்.23) காலை நடைபெற்றது. இதையொட்டி, அதிகாலை 4 மணிக்கு கோயில் நடை திறக்கப்பட்டு விஸ்வரூப தீபாராதனையும், காலை 5 மணிக்கு உதயமாத்தாண்ட அபிஷேகமும் நடைபெற்றது. பின், மாசித்திருவிழா தேரோட்டம் தொடங்கியது.
முதலில் விநாயகர் தேரை பக்தர்கள் வடம் பிடித்து இழுத்துச் சென்றனர். இந்த தேரானது ரதவீதி நான்கிலும் சுற்றி வந்து தேர்நிலையம் வந்தது. அதனைத் தொடர்ந்து, சுவாமி குமரவிடங்கபெருமான், வள்ளி - தெய்வானையுடன் எழுந்தருளிய பெரிய தேர் புறப்பட்டது.
இந்த பெரிய தேரை தனியார் ஏராளமான பக்தர்கள் 'அரோகரா அரோகரா' என முழக்கமிட்டு, பக்தி பரவசத்துடன் வடம் பிடித்து இழுத்தனர். இதையடுத்து தேர் நான்கு ரதவீதி சுற்றி தேர்நிலையம் வந்தது. தொடர்ந்து தெய்வானை அம்பாள் எழுந்தருளிய தேர் புறப்பட்டு, ரதவீதிகளில் சுற்றி தேர்நிலையம் வந்தது. இந்த தேரோட்டத்தில் அரசியல் கட்சி பிரமுகர்கள், தொழிலதிபர்கள் உள்பட ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டனர். மேலும், மாசித் திருவிழாவின் தெப்ப உற்சவம் நாளை (பிப்.24) இரவு நடைபெறுகிறது.
முன்னதாக, விழாவின் முக்கிய நிகழ்ச்சியான 7ஆம் திருவிழா அன்று, சுவாமி சண்முகர் தங்கச் சப்பரத்தில் சிவப்பு சாத்தி கோலத்தில் எழுந்தருளி வீதியுலா வந்து, பக்தர்களுக்கு காட்சியளித்தார். தொடர்ந்து 8ஆம் திருவிழா அன்று, சுவாமி சண்முகர் பச்சை சாத்தி கோலத்தில் எழுந்தருளி வீதியுலா வந்து, பக்தர்களுக்கு காட்சியளித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க:சேலத்தில் 16 வயது சிறுவனுக்கு பாலியல் துன்புறுத்தல் - 2 திருநங்கைகளுக்கு ஆயுள் தண்டனை!