சென்னை:போக்குவரத்து கழகங்களில் ஓட்டுநர், நடத்துநர் பணியிடங்களை தனியார் ஏஜென்சி மூலம் நிரப்பும் நடவடிக்கைகளை தமிழக அரசு கைவிட வேண்டும் என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி செயலாளர் கே.பாலகிருஷ்ணன் அறிக்கை வெளியிட்டுள்ளார்.
அதில் அவர் கூறியிருப்பதாவது, “தமிழ்நாடு அரசுப் போக்குவரத்து கழகங்களில் கடந்த 10 ஆண்டுகளுக்கும் மேலாக போதுமான புதிய பேருந்துகள் கொள்முதல் செய்யப்படாமல் பெரும்பகுதியான பேருந்துகள் காலவாதியான நிலையில் இயங்கிக் கொண்டுள்ளன. இதனால் அடிக்கடி விபத்துகளும் ஏற்படுகின்றன.
பயணிகளின் பாதுகாப்பை உறுதி செய்திட காலாவதியான பேருந்துகளை அப்புறப்படுத்திவிட்டு, புதிய பேருந்துகளை இந்த நிதியாண்டிலேயே கொள்முதல் செய்ய வேண்டும். போக்குவரத்து கழகங்களில் கடந்த 10 ஆண்டுகளாக புதிய நியமனங்கள் இல்லாததால் 25,000க்கும் மேற்பட்ட காலிப்பணியிடங்கள் உள்ளன. இதனால் போதிய அளவில் பேருந்துகளை இயக்க முடியாத சூழல் ஏற்பட்டுள்ளது. தொழிலாளர்களுக்கும் கூடுதலான வேலைப்பளு அதிகரித்துள்ளது.
காலிப்பணியிடங்களை நிரப்பிட வேண்டுமென தொழிற்சங்க பிரதிநிதிகள், அரசியல் கட்சி இயக்கங்கள் தொடர்ந்து குரலெழுப்பி வருகின்றன. இந்நிலையில் இப்பணியிடங்களை நிரப்புவதற்கு பதிலாக, அவுட்சோர்சிங் மூலம் ஒப்பந்த தொழிலாளர்களை பணி செய்ய திருநெல்வேலி, சேலம் உள்ளிட்டு போக்குவரத்து கழகங்கள் டெண்டர் விட்டுள்ளன. போக்குவரத்து கழகங்களில் ஒப்பந்த முறையை அனுமதிக்க முடியாது என சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
இந்த உத்தரவுக்கு எதிராக போக்குவரத்து கழக நிர்வாகங்கள் டிவிசன் பெஞ்சில் செய்த மேல்முறையீட்டில், ஒப்பந்த முறையில் பணி நியமனம் என்பது அரசின் கொள்கை முடிவு. இந்த முடிவில் நீதிமன்றம் தலையிட முடியாது என அரசு வழக்கறிஞர் வாதம் செய்து, உயர்நீதிமன்றம் உத்தரவுக்கு மாறான தீர்ப்பை பெற்றுள்ளது பெரும் அதிர்ச்சியளிக்கிறது. ஒப்பந்த முறையை ஒழிக்க வேண்டிய அரசே, அரசின் பொதுத்துறை நிறுவனங்களில் ஒப்பந்த முறையை திணிப்பது தொழிலாளர்களையும், அரசு வேலைவாய்ப்பை நம்பி இருக்கும் இளைஞர்களையும் வஞ்சிக்கும் செயலாக அமைந்துள்ளது.
போக்குவரத்து கழகங்களை பலவீனப்படுத்துவதோடு, பொதுமக்களின் பாதுகாப்பையும், பயணிகளின் சேவையையும் கேள்விக்குள்ளாக்கியுள்ளது. போக்குவரத்து கழகங்களை சீர்குலைத்து தனியாருக்கு ஒப்படைக்கும் நடவடிக்கைகளின் ஒரு பகுதியாகவே இது அமைந்து விடும். இந்த அணுகுமுறையை ஒரு போதும் ஏற்றுக் கொள்ள முடியாது என்பதையும், தமிழக அரசு இந்த முடிவை உடனடியாக கைவிட வேண்டும்.
எனவே, சட்டத்திற்கும், சமூக நீதிக்கும் எதிரான இந்த ஒப்பந்த முறையை கைவிட்டு, போக்குவரத்து கழகங்களில் உள்ள காலி பணியிடங்களில் நிரந்தர பணியாளர்களை கொண்டு நியமனம் செய்ய வேண்டுமெனவும், போக்குவரத்து கழகங்கள் சேவை துறை என்ற அடிப்படையில் அரசு போக்குவரத்து கழகங்களை மேம்படுத்த உரிய நடவடிக்கைகள் மேற்கொள்ள வேண்டுமென்றும், போதுமான நிதி ஒதுக்கீடு செய்து ஊழியர்களின் பிரச்சனைக்கு தீர்வு காண வேண்டுமெனவும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி தமிழ்நாடு அரசை வலியுறுத்துகிறது" என்று கே.பாலகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்ய
இதையும் படிங்க:கள்ளச்சாராய மரணம்; சிபிஐ விசாரணை வேண்டும் - டாக்டர் ராமதாஸ் வலியுறுத்தல்! - Kallakurichi hooch tragedy