வேலூர்:இந்திய ஜனநாயக புலிகள் கட்சி சார்பில், வேலூர் நாடாளுமன்றத் தொகுதியில் சுயேட்சையாக போட்டியிடும் நடிகர் மன்சூர் அலிகான், வேலூர் தொகுதியில் உள்ள முக்கிய இடங்களுக்குச் சென்று பொதுமக்களிடம் வாக்கு சேகரித்து வருகிறார். அந்த வகையில், இன்று வேலூர் மக்கான் அருகே உள்ள புதிய மீன் மார்க்கெட்டிற்குச் சென்று, அங்குள்ள வியாபாரிகளுடன் சிறிது நேரம் கலந்துரையாடினார். பின்னர், அங்குள்ள மீன் கடை ஒன்றில் மீன்களை வெட்டிக் கொடுத்து வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார்.
அப்போது அங்கிருந்த பொதுமக்கள் அவருடன் செல்பி எடுத்துக் கொண்டனர். இதன் பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்த அவர், “எனக்கு யாரும் பிரச்சாரம் செய்ய அவசியம் இல்லை. நான் தான் இங்கு வெற்றி பெறப் போகிறேன். முதலில் ஆரணி தொகுதியில் போட்டியிட உள்ளதாக அறிவித்தேன். பின்னர், பல்வேறு நபர்கள் வேலூரில் போட்டியிட வேண்டும் என்று கேட்டுக் கொண்டதற்கு இணங்க இங்கு போட்டியிடுகிறேன்.
திமுக, காங்கிரஸ், அதிமுக என்ற அரசியல் கட்சிகள் மாறி மாறி நாட்டை பல ஆண்டுகளாக ஆண்டனர். ஆனால், மக்கள் பிச்சைக்காரர்களாகவே இருக்கின்றனர். மோடி நடத்துவது 'நாடகத் தேர்தல்'. எல்லாவற்றையும் முன் கூட்டியே செய்துவிட்டுதான் தேர்தலை நடத்துகிறார். இது குறித்து ஆரம்பத்தில் இருந்தே நான் கூறி வருகிறேன். ஆளுநர் பதவி என்பதே தேவையில்லாத ஒன்று. நான் நாடளுமன்றம் சென்றால் வாக்குச்சீட்டு மூலம் தேர்தலை நடத்தச் சொல்வேன்” என்றார்.