திருநெல்வேலி: திருநெல்வேலி மாவட்டம், அம்பாசமுத்திரம் மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் அமைந்துள்ள மலைக் கிராமங்களான மாஞ்சோலை, ஊத்து, காக்காச்சி, நாலு முக்கு உள்ளிட்ட இடங்களில் உள்ள தேயிலைத் தோட்டங்களை காலி செய்து அங்கு வசித்து வரும் தொழிலாளர்களை வெளியேற்றும் நடவடிக்கை நடந்து வருகிறது.
இந்த நிலையில், தேயிலை தோட்ட தொழிலாளர்கள் சார்பில், நீதிமன்றத்தில் தொடரப்பட்ட வழக்கில் வனத்துறை விளக்கம் அளித்து அறிக்கை தாக்கல் செய்ய நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்தது. எனவே, களக்காடு முண்டந்துறை புலிகள் காப்பக துணை இயக்குனர் சார்பில் 13 பக்க அறிக்கை நீதிமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில், மாஞ்சோலை மக்கள் வாழ்வுரிமை மீட்புக் குழு சார்பில், நெல்லை மாவட்ட காங்கிரஸ் கமிட்டி அலுவலகத்தில் செய்தியாளர்கள் சந்திப்பு நடைபெற்றது. இதில், அமைப்பின் நிர்வாகிகளான டேனியல் மற்றும் சுபத்ரா உள்ளிட்டோர் செய்தியாளர்களைச் சந்தித்து மாஞ்சோலை மலைக் கிராமம் சார்பில் பல்வேறு தகவல்களை தெரிவித்தனர்.
அப்போது டேனியல் கூறும்போது, "மாஞ்சோலை மலைப்பகுதி தேயிலைத் தோட்ட தொழிலாளர்களிடம் நடத்தப்பட்ட கணக்கெடுப்பில் 90 சதவீதத்திற்கும் அதிகமான மக்கள் மாஞ்சோலை பகுதியிலேயே தொடர்ந்து வாழ விருப்பம் தெரிவித்துள்ளனர். இந்த நிலையில், அரசு சார்பில் எந்த ஒரு குழுவும் அமைக்காமல் மக்களிடம் கருத்துக்களை கேட்காமல் தன்னிச்சையான முறையில் வனத்துறை சார்பில் நீதிமன்றத்தில் நிலை அறிக்கை தாக்கல் செய்யப்பட்டு, பல்வேறு முன்னுக்குப் பின் முரணான தகவல்கள் கொடுக்கப்பட்டுள்ளது.
களக்காடு முண்டந்துறை புலிகள் காப்பக உதவி இயக்குனரால் தாக்கல் செய்யப்பட்ட நிலை அறிக்கையில், மலைவாழ் மக்களின் அடிப்படை உரிமைகள் பறிக்கும் தகவல்கள் இடம்பெற்றுள்ளது. டான்டீ மூலம் தமிழக அரசு தற்போதைய தேயிலை நிறுவனத்தை கையகப்படுத்த முடியாது. ஒப்பந்தத்தை நீட்டிக்க முடியாது.
வன உரிமைச் சட்டத்தின் கீழ் மக்களுக்கு சமூக பாதுகாப்பு அளிக்க முடியாது என நிலை அறிக்கையில் குறிப்பிட்டுள்ளது. மாஞ்சோலை விவகாரத்தில் அரசு எந்த முறையான தகவல்களும் மக்களுக்கு தெரிவிக்கவில்லை. வனத்துறை துணை இயக்குனர் அளித்த தகவல்கள் அரசின் கொள்கை முடிவைப் போல் குறிப்பிடப்பட்டுள்ளது.
எட்டு நாட்களாக குடிநீர், மின்சாரம் உள்ளிட்ட எந்த விதமான அடிப்படை வசதியும் இல்லாமல் மாஞ்சோலை மக்கள் வாழ்கின்றனர். மாவட்ட ஆட்சியர், பொறுப்பு அமைச்சர் ஆகியோர் கூட இந்த விவகாரத்தில் மக்களுக்கான எந்த ஒரு நடவடிக்கையையும் மேற்கொள்ளவில்லை.