திருநெல்வேலி: மங்களூரு வங்கியில் ரூ.4 கோடி மதிப்பிலான நகைகள் மற்றும் பணம் கொள்ளையடிக்கப்பட்ட சம்பவத்தில் திருநெல்வேலி மாவட்டத்தைச் சேர்ந்த 3 பேரை போலீசார் கைது செய்துள்ளனர். திருநெல்வேலியில் கைது செய்யப்பட்ட 2 பேர், நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு மங்களூரு போலீசாரிடம் ஒப்படைக்கப்பட்டனர். அவர்களிடம் இருந்து ரூ.1.5 கோடி மதிப்பிலான 2 கிலோ நகைகள், ரூ.3 லட்சம் ரொக்கம் மற்றும் 2 நாட்டுத்துப்பாக்கி, 3 தோட்டாக்கள் பறிமுதல் செய்யப்பட்டன.
கர்நாடக மாநிலம் தட்சிணகன்னடா மாவட்டம் மங்களூரு அருகே உள்ள உல்லால் பகுதியில் கூட்டுறவு வங்கி செயல்பட்டு வருகிறது. இந்த வங்கியில், கடந்த 17ஆம் தேதி காலை 11.30 மணி அளவில் 5 பேர் கொண்ட கும்பல் முகமூடி அணிந்து, கைத்துப்பாக்கிகள், மற்றும் கத்திகளுடன் நுழைந்துள்ளது. அப்போது வங்கியில் 5 ஊழியர்கள் இருந்துள்ளனர். அந்த கும்பல் துப்பாக்கி முனையில் ஊழியர்களை மிரட்டி ரூ.4 கோடி மதிப்பிலான தங்க நகைகள் மற்றும் ரொக்கத்தை கொள்ளை அடித்து தப்பிச் சென்றது.
இது குறித்து, மங்களூரு மாநக காவல் ஆணையர் அனுபம் அகர்வால் கூறுகையில், “வங்கி கொள்ளைச் சம்பவம் குறித்து மங்களூரு போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இச்சம்பவத்தில்,கொள்ளையர்கள் போலியான பதிவு எண் கொண்ட இரண்டு கார்களில் கேரளா நோக்கி தப்பிச் சென்றது தெரியவந்துள்ளது. மேலும், வங்கியில் பொருத்தப்பட்ட சிசிடிவி கேமராக்கள் வேலை செய்யாமல பழுதடைந்துள்ளன.
இதனையடுத்து, வங்கிக்கு வெளியே இருந்த கேமரா காட்சிகளை ஆய்வு செய்த நிலையில், கொள்ளையர்கள் கருப்பு நிற ஃபியட் காரில் தப்பிச் சென்றுள்ளனர். இதனையடுத்து, சுங்கச்சாவடி உட்பட பல்வேறு பகுதிகளில் இருந்த சிசிடிவி காட்சிகளை போலீசார் ஆய்வு செய்துள்ளனர். அதன் அடிப்படையில், கொள்ளையர்களின் கார் நம்பரை வைத்து விசாரணை செய்ததில், அவர்கள் மும்பையைச் சேர்ந்தவர்கள் என்பது தெரிய வந்துள்ளது.
மேலும், இந்த வழக்கை விசாரித்து குற்றவாளிகளை கைது செய்ய சிறப்பு குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன. தொழில்நுட்ப கண்காணிப்பு அடிப்படையில் கொள்ளையர்களை விரைவில் பிடிக்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது” இவ்வாறு அவர் தெரிவித்திருந்தார்.
இதனையடுத்து, மங்களூரு தனிப்படை போலீசார் மும்பை விரைந்தனர். அங்கு கண்ணன் மணி என்பவரை பிடித்து போலீசார் விசாரணை மேற்கொண்டனர். இதில், தமிழ்நாட்டின் நெல்லை மாவட்டத்தைச் சேர்ந்த அவரும், மேலும் 2 பேரும் இந்த கொள்ளை சம்பவத்தில் தொடர்புடையது தெரியவந்தது.