தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

புல்லட்டில் சென்ற கல்லூரி மாணவரை சாதி பெயர் கூறி தாக்கியதாக வழக்கு: 3 இளைஞர்கள் கைது! - MANAMADURAI COLLEGE STUDENT ATTACK

மானாமதுரை அருகே புல்லட்டில் சென்ற கல்லூரி மாணவரை சாதி பெயர் கூறி தாக்கியதாக பதிவு செய்யப்பட்ட வழக்கில் 3 இளைஞர்கள் வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின்கீழ் கைது செய்யப்பட்டுள்ளனர்.

கல்லூரி மாணவரை சாதி பெயர் கூறி தாக்கியதாக 3 இளைஞர்கள் கைது
கல்லூரி மாணவரை சாதி பெயர் கூறி தாக்கியதாக 3 இளைஞர்கள் கைது (ETV Bharat Tamil Nadu)

By ETV Bharat Tamil Nadu Team

Published : Feb 14, 2025, 12:48 PM IST

Updated : Feb 14, 2025, 1:13 PM IST

சிவகங்கை: சிவகங்கை மாவட்டம் மானாமதுரை அருகே பட்டியல் சமூகத்தைச் சேர்ந்த அரசு கல்லூரி மாணவர் ஒருவருக்கு நேர்ந்த கொடுமை பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

மானாமதுரை அருகே நேற்று முன்தினம் மாலை 6.30 மணியளவில் கல்லூரி மாணவர் வகுப்பு முடித்து விட்டு, தனது புல்லட்டில் வீடு திரும்பிக் கொண்டிருந்தார். அப்போது சாலையின் குறுக்கே திடீர் என முதியவர் வந்துள்ளார். இதனையடுத்து, அந்த மாணவர் வண்டியை நிறுத்தி விட்டு, அந்த முதியவரை எச்சரித்ததாக கூறப்படுகிறது.

இதனைக் கண்ட அப்பகுதி இளைஞர்கள் வினோத்குமார், ஆதி ஈஸ்வரன், வல்லரசு ஆகியோர் கல்லூரி மாணவரை அவரது சாதிப் பெயரை சொல்லி தகாத வார்த்தைகளால் திட்டியதோடு, மாணவரை வாளால் தாக்கியதாகக் கூறப்படுகிறது.

இதனையடுத்து அந்த கல்லூரி மாணவருக்கு கையில் பலத்த காயம் ஏற்பட்டது. இதனைத் தொடர்ந்து அப் பகுதியில் இருந்தவர்கள் கல்லூரி மாணவரை மீட்டு முதலுதவி செய்ய மானாமதுரை அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு முதலுதவி சிகிச்சை முடிந்த பின் மேல் சிகிச்சைக்காக சிவகங்கை அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.

இதையும் படிங்க:பள்ளி முடிந்து விளையாடிய சிறுமி! திடீரென இரும்பு கேட் விழுந்து உயிரிழந்த சோகம்

இந்நிலையில் மாணவர் சிகிச்சைக்காக குடும்பத்துடன் மருத்துவமனைக்கு சென்ற நேரத்தில் அவரது வீட்டை 3 இளைஞர்கள் அடித்து நொறுக்கியதாகவும் கூறப்படுகிறது. இதில் வீடு முழுவதும் பலத்த சேதம் அடைந்துள்ளது.

இந்த சம்பவம் தொடர்பாக கல்லூரி மாணவரின் தாயார், மானாமதுரை சிப்காட் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அதன்பேரில் புகாரில் குறிப்பிடப்பட்ட வினோத், ஆதி ஈஸ்வரன் மற்றும் வல்லரசு ஆகிய மூன்று பேரையும் வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு கைது செய்து, போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Last Updated : Feb 14, 2025, 1:13 PM IST

ABOUT THE AUTHOR

...view details