தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

குடியால் சீரழிந்த குடும்பம்.. மனைவி, மகள்களை தண்ணீர் தொட்டியில் வீசி கொன்ற கொடூர தந்தை..! கோவையில் பயங்கரம் - Coimbatore murder case - COIMBATORE MURDER CASE

Man killed his Wife and kids: கோவையில் மனைவி மற்றும் இரண்டு பெண் குழந்தைகளை தண்ணீர் தொட்டிக்குள் வீசி கொன்றுவிட்டு நாடகமாடிய நபரை போலீசார் கைது செய்துள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

உயிரிழந்த புஷ்பா, கைது செய்யப்பட்ட அவரது கணவன் தங்கராஜ்
உயிரிழந்த புஷ்பா, கைது செய்யப்பட்ட அவரது கணவன் தங்கராஜ் (Credits - ETV Bharat Tamil Nadu)

By ETV Bharat Tamil Nadu Team

Published : Jul 9, 2024, 12:13 PM IST

கோயம்புத்தூர்:கோவை மாவட்டம், ஒண்டிப்புதூர் நெசவாளர் காலனி எம்ஜிஆர் நகரைச் சேர்ந்தவர் தங்கராஜ் (40). இவரது மனைவி புஷ்பா (35). இவர்களுக்கு ஹரிணி (9), ஷிவானி (3) ஆகிய இரண்டு பெண் குழந்தைகள் இருந்தனர். இந்த நிலையில், தங்கராஜ் பெயின்டிங் உள்ளிட்ட கிடைக்கும் வேலைகளை செய்து வருகிறார். மனைவி புஷ்பா வீட்டு வேலைக்குச் சென்று வந்துள்ளார்.

இந்நிலையில், தங்கராஜ் கடந்த ஆறு மாதங்களுக்கும் மேலாக சரிவர வேலைக்கு செல்லாமல் தினமும் குடித்துவிட்டு வீட்டிலேயே இருந்துள்ளார். இதனால், கணவன் மனைவி இருவருக்கும் இடையே தினமும் வாக்குவாதம், சண்டைகள் ஏற்பட்டதாக தெரிகிறது.

குழந்தைகளை அடுத்தடுத்து வீசிய கொடூரம்: இந்த சூழலில், தனது மனைவி மற்றும் குழந்தைகள் தண்ணீர் தொட்டிக்குள் கிடப்பதாகவும், ஒரு குழந்தையை மீட்ட நிலையில் இன்னொரு குழந்தை மற்றும் தனது மனைவியை மேலே எடுப்பதற்கு உதவி செய்யுமாறு நேற்று காலை தங்கராஜ் அக்கம்பக்கத்தினரை அழைத்துள்ளார்.

தங்கராஜ் கூறியதைக் கேட்டதும் அதிர்ச்சி அடைந்த அக்கம்பக்கத்தினர் உடனடியாக வீட்டிற்கு சென்று பார்க்கையில், பெரிய மகள் ஹரிணி தண்ணீர் தொட்டிக்கு வெளியே நனைந்த நிலையில் சடலமாக கிடந்துள்ளர். புஷ்பாவும், இளைய மகள் ஷிவானியும் தண்ணீர் தொட்டிக்குள் கிடந்துள்ளனர்.

தாய், மகள்கள் சடலம்: பின்னர் அக்கம்பக்கத்தினர் காவல்துறையினருக்கு தகவல் தெரிவித்துள்ளனர். தகவலையடுத்து சம்பவ இடத்திற்கு வந்த காவல்துறையினர் மூன்று பேரின் உடல்களையும் மீட்டு இஎஸ்ஐ (ESI) மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.

குடியால் சீரழிந்த குடும்பம்: இது தொடர்பாக போலீசார் நடத்திய விசாரணையில் தங்கராஜ், கடந்த 8ஆம் தேதி காலை சுமார் 6 மணியளவில் குடிப்பதற்கு பணம் கேட்டு மனைவி புஷ்பாவிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டதாகவும்; ஆனால், புஷ்பா பணம் தராமல் மறுத்து கணவனுடன் வாக்குவாதம் செய்ததாக தெரியவருகிறது.

இதனால், கணவன் மனைவி இருவருக்கும் இடையே பலத்த சண்டை ஏற்பட்டதில், அப்போது தங்கராஜ் மூத்த மகள் ஹரிணியை தண்ணீர் தொட்டிக்குள் தள்ளி விட்டுள்ளார். ஹரிணியை தண்ணீர் தொட்டிக்குள் தள்ளிவிட்டதால் பதறிபோன புஷ்பா, ஹரிணியை மீட்பதற்கு தொட்டிக்குள் குதித்துள்ளார். அப்போது தங்கராஜ் இளைய மகளான ஷிவானியையும் தொட்டிக்குள் வீசி தொட்டியை மூடியால் மூடியுள்ளார்.

பிறகு சுமார் 7 மணிக்கு மேல் அக்கம்பக்கதினரிடம் தண்ணீர் தொட்டிக்குள் இருந்து உடலை வெளியே எடுப்பதற்கு உதவி கேட்டதை தங்கராஜ் ஒப்புக்கொண்டுள்ளார் என காவல்துரை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதைத்தொடர்ந்து அவர் மீது கொலை வழக்குப்பதிவு செய்த போலீசார் தங்கராஜை கைது செய்தனர்.

கட்டிய மனைவியையும், பெற்ற பிள்ளைகளையும் குடிக்க காசு கொடுக்காததால், தண்ணீரில் மூழ்கடித்து கொன்ற நபரின் செயல் அப்பகுதியில் மிகுந்த சோகத்தையும், அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.

இதையும் படிங்க: "வெறும் வாக்குக்கு மட்டும் தான் சமூக நீதியா?" - ஆம்ஸ்ட்ராங் விவகாரத்தில் தமிழக அரசை விளாசிய பா.ரஞ்சித்

ABOUT THE AUTHOR

...view details