தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

மாமல்லன் இறங்குனா மாஸ் தான்! - தடம்புரண்ட பெட்டிகளை அகற்றும் பணி தீவிரம் - BAGMATI EXPRESS TRAIN ACCIDENT

கவரப்பேட்டையில் மீட்புப்பணிகள் நடைபெற்று வரும் வேளையில், ரயில் பெட்டிகளை அகற்றுவதற்கு சிரமமாக இருப்பதால் 140 டன் எடை கொண்ட மாமல்லன் அதிதிறன் படைத்த பளு தூக்கும் கருவி பிரத்யேகமாக வரவழைக்கப்பட்டு மீட்புப்பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளது.

மாமல்லன் கருவி
மாமல்லன் கருவி (Credits - ETV Bharat Tamil Nadu)

By ETV Bharat Tamil Nadu Team

Published : Oct 12, 2024, 4:47 PM IST

Updated : Oct 12, 2024, 6:29 PM IST

திருவள்ளூர் :கர்நாடக மாநிலம், மைசூரில் இருந்து சென்னை, பெரம்பூர் வழியாக பீகார் மாநிலம் தர்பாங்கா நோக்கி சென்று கொண்டிருந்த பாக்மதி எக்ஸ்பிரஸ் ரயில் (12578) நேற்றிரவு 8.30 மணி அளவில் திருவள்ளூர் மாவட்டம், கும்மிடிப்பூண்டி அடுத்த கவரப்பேட்டையில் நின்றுக்கொண்டிருந்த சரக்கு ரயில் மீது பயங்கரமாக மோதி விபத்துக்குள்ளானது.

இதில், 13 பெட்டிகள் தரம் புரண்ட நிலையில், இரு ஏசி பெட்டிகளும் தீப்பற்றி எரிந்தன. இந்த விபத்தில் பயணிகள் மீட்கப்பட்டு அருகில் இருந்த தனியார் மண்டபத்தில் தங்க வைக்கப்பட்டனர். இதில் யாருக்கும் உயிர்சேதம் இல்லை.

விபத்தில், பலத்த காயமடைந்த 3 நபர்கள் சென்னை ஸ்டான்லி மருத்துவமனையிலும், லேசான காயமடைந்த 6 நபர்கள் பொன்னேரி அரசு மருத்துவமனையிலும் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். மற்ற பயணிகள் விபத்து மீட்பு ரயில் மூலம் சென்னை சென்ட்ரலுக்கு அழைத்து செல்லப்பட்டு, அங்கிருந்து இன்று காலை சிறப்பு ரயில் தர்பாங்காவிற்கு புறப்பட்டனர். இந்த ரயில் 1800 பயணிகளை அழைத்து சென்றது.

தடம் புரண்ட ரயில் பெட்டிகளை அப்புறப்படும் மீட்புப்பணிகள்முழு வீச்சில் நடைபெற்று வருகின்றன. மேலும், சம்பவ இடத்தில் தேசிய மீட்புப்படையினர், தமிழ்நாடு தீயணைப்புத் துறையினர், மாநில காவல் துறையினர், ரயில்வே போலீசார் உள்ளிட்ட 500 பேர் மீட்புப்பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

இந்த மீட்புப்பணியில், 5 கனரக மண் நகர்த்தும் கருவிகளும், 3 ஜேசிபிகளும் ஈடுபடுத்தப்பட்டன. ஆனால், ரயில் பெட்டிகள் ஒவ்வொன்றும் சராசரியாக 33 டன்னிலிருந்து 45 டன் வரை இருப்பதால், இவற்றை அப்புறப்படுத்த 140 டன் எடை கொண்ட மாமல்லன் அதிதிறன் படைத்த பளு தூக்கும் கருவி இப்பணிகளுக்காக பிரத்யேகமாக வரவழைக்கப்பட்டு மீட்ப்புபணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளது.

இந்த மீட்புப்பணி எவ்வாறு நடைபெற்று வருகிறது என்பதை தெற்கு ரயில்வே தொடர்ந்து கண்காணித்து வருகிறது. அதுமட்டுமின்றி, மீட்புப்பணிக்கு தேவையான உதவிகளை மெக்கானிக்கல் மற்றும் மின்சாரத் துறைகள் வழங்கி வருகின்றன.

மீட்புப்பணிகள் நடைபெற்று வரும் வேளையில், ரயில்வே பாதுகாப்பு ஆணையர் தெற்கு வட்டம், ஏ.எம்.செளத்தரி மற்றும் மூத்த அதிகாரிகள் விபத்து தொடர்பாக கவரப்பேட்டையில் ஆய்வு மேற்கொண்டனர். கவரப்பேட்டை ரயில் நிலையத்தில் மொத்த 4 லைன்கள் உள்ள நிலையில், 2 லூப் லைன்னில் உள்ள ரயில் பெட்டிகள் இன்றிரவுக்குள் அப்புறப்படுத்தப்படும். மீதமுள்ள 2 லைன்களில் உள்ள ரயில் பெட்டிகள் நாளை (அக் 13) அதிகாலைக்குள் அப்புறப்படுத்தப்படும் என தெற்கு ரயில்வே தெரிவித்துள்ளது.

இதையும் படிங்க :பாக்மதி எக்ஸ்பிரஸ் ரயில் விபத்து: சதி வேலை காரணமா என என்.ஐ.ஏ அதிகாரிகள் விசாரணை

லூப் லைன் எதற்கு? : வேகமாக செல்லும் எக்ஸ்பிரஸ் ரயில்களுக்கு வழி விடுவதற்காக மற்ற ரயில்கள் ஓரங்கட்டி நிறுத்த லூப் லைன் அமைக்கப்படுகிறது.

விபத்துக்கு காரணம் :கவரப்பேட்டைலூப்லைனில் தவறான சிக்னல் காரணமாக, விரைவு ரயில் சென்று நின்று கொண்டிருந்த சரக்கு ரயில் மீது மோதி விபத்துக்குள்ளானதாக, முதற்கட்ட விசாரணையில் தெரிய வந்துள்ளது. மேலும், போலீசார் வழக்குப்பதிவு செய்து ரயில் ஓட்டுநரிடம் விசாரணை மேற்கொண்டு வருவதாகவும், தகவல்கள் வெளியாகி உள்ளன.

புதிய தண்டவாளம் : புதிய தண்டவாளம் அமைக்கும் பணியும் துவங்கியது. இரு ரயில்களும் ஒன்றோடொன்று மோதிய விபத்தில் சிதிலமடைந்த தண்டவாளப்பகுதியில் புதியதாக தண்டவாளம் அமைக்கும் பணிகளும் நடைபெற்று வருகின்றன. புதிய தண்டவாளங்கள் ரயிலில் கொண்டு வரப்பட்டு, புதிய தண்டவாளம் அமைக்கும் பணியானது நடைபெற்று வருகின்றது. சுமார் 1 கிலோமீட்டர் அளவுக்கு தண்டவாளம் சேதமடைந்து இருப்பதாக கூறப்படுகிறது.

ஈடிவி பாரத் தமிழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே க்ளிக் செய்யவும்

Last Updated : Oct 12, 2024, 6:29 PM IST

ABOUT THE AUTHOR

...view details