ஈரோடு: கோபிசெட்டிபாளையம் அருகே உள்ள அந்தியூர் வனச் சரகத்திற்கு உட்பட்ட வனப்பகுதிகளில் ஏராளமான யானை, காட்டெருமை, சிறுத்தை உள்ளிட்ட வனவிலங்குகள் உள்ளன. வனப்பகுதியில் போதிய உணவு மற்றும் தண்ணீர் கிடைக்காத நிலையில் யானை உள்ளிட்ட வனவிலங்குகள் வன எல்லைப் பகுதியில் உள்ள கிராமங்களுக்குள் புகுந்து விவசாய பயிர்களை சேதப்படுத்தி வந்தது.
இதனால் யானைகள் விவசாய நிலங்களுக்குள் புகுந்து பயிர்களை சேதப்படுத்தாமல் இருப்பதற்காக பெரும்பாலான விவசாய நிலங்கள் முழுவதும் மின்சார வேலி அமைக்கப்பட்டுள்ளது. ஆனால் அந்த மின்சார வேலியையும் உடைத்து விட்டு யானைகள் நிலங்களுக்குள் புகுந்து பயிர்களை சேதப்படுத்தி வருவதால் ஒரு சில இடங்களில் விவசாயிகள் அந்த மின்வேலியில் உயர் அழுத்த மின்சார இணைப்பு கொடுத்துள்ளதாக கூறப்படுகிறது.