தூத்துக்குடி:தருவைக்குளம் மரியான் தெருவைச் சேர்ந்தவர் மைக்கேல் ஜெயராஜ். இவர், கடந்த ஜனவரி 28ஆம் தேதி, இவருக்குச் சொந்தமான விசைப்படகில், அப்பகுதியைச் சேர்ந்த 10 மீனவர்களுடன் தருவைக்குளம் மீன்பிடித் துறைமுகத்திலிருந்து, தங்கு கடல் மீன் பிடித்தொழிலுக்கு புறப்பட்டுச் சென்றுள்ளனர்.
இந்த படகினை தூத்துக்குடி சிலுவைப்பட்டியைச் சேர்ந்த செனிஸ்டன் என்பவர் ஓட்டிச் சென்றுள்ளார். இந்நிலையில், கடந்த பிப்ரவரி 3ஆம் தேதி கடலில் மீன் பிடித்துத் கொண்டிருந்த நிலையில், படகு இன்ஜினில் திடீரென பழுது ஏற்பட்டுள்ளது. இது குறித்த தகவலை, அவர்களுக்கு அருகில் மீன் பிடித்துக் கொண்டிருந்த மீனவர்கள், தருவைக்குளம் மீன்பிடி துறைமுகத்திற்கு தெரிவித்துள்ளனர்.
இதனையடுத்து, தருவைக்குளம் மீன்பிடி துறைமுகத்திலிருந்து மீனவர்களை தொடர்பு கொண்ட நிலையில், அவர்களுக்கு முறையான சிக்னல் வசதி கிடைக்காததால், அவர்களை தொடர்பு கொள்ள முடியாத நிலை இருந்துள்ளது.
இந்நிலையில், இன்ஜின் பழுதான படகு, தற்போது கேரளா மாநிலம் மினிகாய் தீவில் இருந்து சுமார் 500 கடல் மைல் தொலைவில் உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்த பகுதி மாலத்தீவுக்குச் சொந்தமானது என்றும் கூறப்படுகிறது. இது தொடர்பாக இந்திய கடலோரக் காவல் படையினர், மாலத்தீவு கடலோரக் காவல்படைக்கு தகவல் தெரிவித்து, அவர்களை மீட்கும் பணி குறித்த நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளனர். தற்போது, அவர்களை மீட்கும் பணியில் மாலத்தீவு கடற்படையினர் ஈடுபட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
இதையும் படிங்க:விழுப்புரம் கல்குவாரியில் பாறைகள் சரிந்து விபத்து; இருவர் உயிரிழப்பு - போலீசார் விசாரணை!