விழுப்புரம்:திண்டிவனம் அடுத்த மயிலத்தில் உள்ள மயிலம் வள்ளி தெய்வானை உடனுறை ஸ்ரீசுப்பிரமணியர் சுவாமி ஆலயத்தில் ஆண்டுதோறும் பங்குனி உத்திரத் தேர்த் திருவிழா வெகு விமர்சையாக நடை பெறுவது வழக்கம். அந்த வகையில், இந்த ஆண்டு பங்குனி உத்திர தேர்த்திருவிழா கடந்த 15 ந் தேதி அன்று காலை 6.45 மணிக்கு கொடியேற்றத்துடன் துவங்கியது.
இதனைத் தொடர்ந்து கடந்த 19ம் தேதி இரவு தங்க மயில் வாகன உற்சவமும், 22ம் தேதி திருக்கல்யாணம் வெள்ளிக்குதிரைவாகன உற்சவமும் நடைபெற்றது. இந்நிலையில், இன்று (மார்ச் 23) திருத்தேர் வடம் பிடித்தல் நிகழ்ச்சி நடைபெற்றது. தேரை ஸ்ரீமத் சிவஞான பாலய 20ம் பட்டம் சுவாமிகள் வடம் பிடித்து இழுத்து வைத்தார்.
பக்தர்கள், 'முருகனுக்கு அரோகரா.. முருகனுக்கு அரோகரா' என உற்சாகமாக பக்தியுடன் தேரை வடம் பிடித்து இழுத்தனர். இதில் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு முருகனை வழிபட்டனர். இதனை தொடர்ந்து நாளை (மார்ச் 24) காலை பங்குனி உத்திர தீர்த்த வாரியும், இரவு தெப்ப உற்சவமும் நடைபெற உள்ளது.