16 ஆண்டுகளுக்கு பின் மகா கும்பாபிஷேகம் - ஆதினம் தலைமையில் கோ பூஜையுடன் துவக்கம் கும்பகோணம்:தமிழகத்திலேயே புகழ்பெற்ற சரபேஸ்வரர் ஸ்தலமாக விளங்கும் கும்பகோணம் அருகேயுள்ள திருபுவனம் கம்பகரேஸ்வர சுவாமி திருக்கோயில், தருமபுர ஆதீனத்திற்கு சொந்தமானதாகும். 3ஆம் குலோத்துங்க சோழனால் சுமார் 800 ஆண்டுகளுக்கு முன்பு கட்டப்பட்ட திருபுவனம் கம்பகரேஸ்வரசுவாமி திருக்கோயில் சச்சிதானந்த விமானம் உட்பட 4 பெரிய கோபுரங்களை கொண்டது.
கிபி 1178 முதல் 1218ல் கட்டப்பட்ட இக்கோயிலில் மூலவர் நடுக்கம் தீர்த்த இறைவன் என போற்றப்படும் கம்பகரேஸ்வரர் என்றும், அறம் வளர்த்த நாயகியாக இறைவி தர்மசவர்த்தினி என்ற பெயருடனும் அருள் பாலிக்கின்றனர். இத்தகைய பிரசித்தி பெற்ற கோயிலின் மகா கும்பாபிஷேக விழா, 16 ஆண்டுகளுக்கு பிறகு வரும் பிப்ரவரி 2ஆம் தேதி நடைபெற உள்ளது.
முன்னதாக கடந்த 2008ஆம் ஆண்டு ஜனவரி மாதம் இக்கோயிலின் மகா கும்பாபிஷேகம் நடைபெற்றது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில், இந்த ஆண்டு நடைபெற உள்ள கும்பாபிஷேக திருப்பணிகள், கடந்த ஆண்டு மார்ச் 10ஆம் தேதி பாலாலயம் செய்து தருமபுர ஆதீனத்தால் தொடக்கி வைக்கப்பட்டது.
சுமார் 4 கோடி ரூபாய் மதிப்பீட்டில் நடைபெற்று வரும் கும்பாபிஷேக பணிகள் நிறைவு கட்டத்தை எட்டியுள்ள நிலையில், இக்கோயில் மகா கும்பாபிஷேகம் இந்த ஆண்டு பிப்ரவரி மாதம் நடைபெறவுள்ளது. இதனிடையே, கும்பாபிஷேக யாகசாலைக்காக, கடந்த 08ம் தேதி தலைக்காவேரியில் இருந்து 3 வெள்ளி கடங்களில் காவிரி புனிதநீர் கொண்டு பிரத்யோகமாக வரப்பட்டது.
அதனைத் தொடர்ந்து யாகசாலை பூஜை தொடக்கமாக, தருமபுர ஆதீனம் தலைமையில் திருக்கோயில் வளாகத்தில், 108 பசுக்களை வைத்து சிறப்பு கோ பூஜையும், அதனையடுத்து யானை, குதிரை மற்றும் ஒட்டகங்களுக்கு சிறப்பு பூஜைகளும் செய்யப்பட்டன. இதில் கோயில் சிவாச்சாரியார்கள், வேத பண்டிதர்கள், கோயில் ஊழியர்கள், பொது மக்கள் என ஏராளமானவர்கள் கலந்து கொண்டனர் அதனைத் தொடர்ந்து இன்று (ஜன.29) மாலை யாகசாலை வேள்வி முதல் கால பூஜைகள் தொடங்குகிறது.
அதன் பிறகு நாளை (ஜன.30) மாலையில் திருக்கோயிலில் நடைபெறும் 1008 திருவிளக்கு பூஜை மற்றும் யாக சாலை பூஜை நிகழ்விலும் சிறப்பு விருந்தினராக புதுச்சேரி துணை நிலை ஆளுநர் தமிழிசை சௌந்தர்ராஜன் பங்கேற்க உள்ளதாகவும், அதுபோல பிப்ரவரி 2ஆம் தேதி வெள்ளிக்கிழமை காலை நடைபெறும் மகா கும்பாபிஷேகம் நிகழ்வில், தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி பங்கேற்க உள்ளாதக தருமபுர் ஆதினம் தெரிவித்துள்ளார்.
இதையும் படிங்க:நாளை முதல் கிளாம்பாக்கம், மாதவரத்தில் இருந்து தென் மாவட்டங்களுக்குப் பேருந்து இயக்கம்; அமைச்சர் சிவசங்கர் அறிவிப்பு!