சென்னை:பகுஜன் சமாஜ் கட்சி மாநிலத் தலைவர் ஆம்ஸ்ட்ராங் கடந்த ஜூலை 5ஆம் தேதி சென்னையில் வெட்டிப் படுகொலை செய்யப்பட்டார். இந்த வழக்கில் கைது செய்யப்பட்ட 11 நபர்களை 5 நாட்கள் காவலில் எடுத்து செம்பியம் போலீசார் விசாரணை செய்து வருகின்றனர். அவர்களிடம் நடத்தப்பட்ட விசாரணையில், கொலை செய்துவிட்டு ஆயுதங்களை மாதவரம் பகுதியில் பதுக்கி வைத்திருப்பதாக தெரிவித்துள்ளனர்.
இதையடுத்து, ஆயுதங்களை பறிமுதல் செய்வதற்காக, கைது செய்யப்பட்டவர்களில் ஒருவரான திருவேங்கடம் என்ற நபரை இன்று (ஜூலை 14) அதிகாலை போலீசார் மாதவரம் பகுதிக்கு அழைத்துச் சென்றனர். அப்போது திருவேங்கடம் போலீசார் பிடியிலிருந்து தப்பி ஓடி, ஆயுதங்கள் பதுக்க வைத்திருந்த தகர கொட்டகைக்குள் ஒளிந்து கொண்டு துப்பாக்கியால் போலீசாரை தாக்க முயன்றுள்ளார் திருவேங்கடம்.
இதனால் பாதுகாப்புக்காக போலீசார் துப்பாக்கியால் சுட்டதில் திருவேங்கடம் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார். இதையடுத்து, என்கவுண்டர் செய்யப்பட்ட அவரது உடல் பிரேத பரிசோதனைக்காக ஸ்டான்லி அரசு மருத்துவமனைக்கு கொண்டு வரப்பட்டது.
என்கவுண்டர் விவகாரம் என்றால் மாஜிஸ்திரேட் விசாரணைக்கு உத்தரவு விடப்படும். முன்னதாக இருந்த குற்றவியல் நடைமுறைச் சட்டம் அமலில் இருந்தபோது, சட்டப்பிரிவு 176 என்ற பிரிவில் வழக்குப்பதிவு செய்யப்படும். தற்போது குற்றவியல் சட்டங்கள் மாற்றப்பட்டுள்ள நிலையில், என்கவுண்டர் சம்பவம் தொடர்பாக பிஎன்எஸ்எஸ் 196 என்ற சட்டப் பிரிவின் கீழ். புழல் காவல் நிலையத்தில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
இந்நிலையில், இந்த வழக்கை மாஜிஸ்திரேட் விசாரணை செய்ய உத்தரவிடப்பட்டுள்ளது. எந்த மாஜிஸ்திரேட் வழக்கை விசாரணை செய்வார் என திருவள்ளூர் நீதிமன்ற தலைமை நடுவர் உத்தரவிடுவார். அதன் பிறகு, மாஜிஸ்திரேட் நேரடியாக வந்து என்கவுண்டரில் சம்பந்தப்பட்ட காவல்துறையினரிடம் விசாரணை நடத்துவார். இதனையடுத்து, மாஜிஸ்திரேட் முன்னிலையில் ஸ்டான்லி அரசு மருத்துவமனையில் பிரேதப் பரிசோதனை நடத்தப்படும் என காவல்துறையினர் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதையும் படிங்க:சென்னையில் ரவுடி திருவேங்கடம் என்கவுண்டர் செய்யப்பட்ட இடத்தில் போலீஸ் உயரதிகாரிகள் நேரில் ஆய்வு! - Rowdy Tiruvengadam Encounter