மதுரை:திருப்பரங்குன்றம் மலையில் சமணர் தொடர்பான தொல்லியல் எச்சங்கள் இந்திய தொல்லியல் துறையின் கட்டுப்பாட்டில் உள்ளன. இந்த நிலையில் அங்குள்ள பழமையான சமணர் குகைத்தளத்தில் அடையாளம் தெரியாத சிலர் பச்சை நிற பெயின்ட் அடித்து சேதப்படுத்தியுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இதுகுறித்து வழக்குப்பதிவு செய்துள்ள போலீசார் மர்ம நபர்களை தீவிரமாக தேடி வருகின்றனர்.
தமிழ் கடவுள் முருகனின் அறுபடை வீடுகளில் முதல் படை வீடாக கருதப்படுவது திருப்பரங்குன்றம். இங்குள்ள மலையில் ஆயிரத்தில் இருந்து 2000 ஆண்டுகள் பழமையான பல்வேறு தொல்லியல் சின்னங்கள் நிறைந்துள்ளன. அதுமட்டுமன்றி மலை மேல் காசி விஸ்வநாதர் கோயிலும் அதற்கு சற்று அருகே இஸ்லாமியர்கள் வழிபடும் தர்காவும் உள்ளன.
இம்மலையை ஆக்கிரமிக்கும் நோக்கில் சில அமைப்புகள் செயல்பட்டு வருவதாக, இந்து அமைப்புகள் போராடி வரும் நிலையில், திருப்பரங்குன்றம் மலை மீதுள்ள சமணர் குகையை ஆக்கிரமிக்கும் நோக்கில், பச்சை பெயின்ட் பூசப்பட்டுள்ளது தற்போது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. தவிர, பாறையில் சில வாக்கியங்களும் எழுதப்பட்டுள்ளன.