மதுரை: பிரபல யூடியூபரான சவுக்கு சங்கர், தமிழ்நாடு காவல்துறை அதிகாரிகள் மற்றும் பெண் காவலர்கள் குறித்து அவதூறாகப் பேசிய வழக்கில், கடந்த மே 4ஆம் தேதி தேனி மாவட்டத்தில், கோவை சைபர் கிரைம் போலீசாரால் கைது செய்யப்பட்டு, நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டார்.
இதனிடையே, சவுக்கு சங்கர் கைது செய்யப்பட்ட போது கஞ்சா வைத்திருந்ததாகக் கூறி சங்கர் உள்ளிட்ட மூவர் மீது தேனி பழனிசெட்டிபட்டி போலீசார் வழக்குப் பதிவு செய்தனர். அந்த வழக்கில், சவுக்கு சங்கர் நேற்று (செவ்வாய்க்கிழமை) மீண்டும் கைது செய்யப்பட்டார்.
இந்த நிலையில், இது தொடர்பான விசாரணைக்காக, கோவையிலிருந்து பலத்த பாதுகாப்புடன் அழைத்து வரப்பட்டு, மதுரையில் உள்ள போதைப்பொருள் தடுப்புப் பிரிவு சிறப்பு நீதிமன்றத்தில் இன்று (புதன்கிழமை) சவுக்கு சங்கர் ஆஜர்படுத்தப்பட்டார். இதனையடுத்து, இதன் விசாரணை நீதிபதி செங்கமலச்செல்வன் முன்னிலையில் நடைபெற்றது.