பாம்பன்:மண்டபம் - ராமேஸ்வரத்திற்கு இடையே உள்ள பாம்பன் கடல் பகுதியில் இந்திய ரயில்வேயால் சுமார் 500 கோடி ரூபாய் செலவில் புதிய ரயில் பாலம் கட்டப்பட்டுள்ளது. இப்பாலத்தின் உறுதித்தன்மை, கடல் அரிப்பு, கர்டர்களின் தாங்கு திறன், தூண்களின் வலுத்தன்மை ஆகியவை குறித்து கடந்த நவம்பர் 13-14-ஆம் தேதிகளில் தென் மண்டல ரயில்வே பாதுகாப்பு ஆணையர் ஏ.எம்.சௌத்ரி ஆய்வு மேற்கொண்டார். அப்போது 80 கி.மீ. வேகத்தில் பாம்பன் கடல் பாலம் மீது ரயில் இயக்கப்பட்டு சோதனை மேற்கொள்ளப்பட்டது.
தென் மண்டல ஆணையர் அறிக்கை
இதனைத் தொடர்ந்து கடந்த நவம்பர் 26-ஆம் தேதி ரயில்வே வாரிய செயலாளருக்கு, தென் மண்டல ரயில்வே பாதுகாப்பு ஆணையர் சௌத்ரி, பாம்பன் புதிய பாலம் குறித்த தனது அறிக்கையை சமர்ப்பித்தார். அந்த அறிக்கையில், ''தற்போதைய பாலம் மோசமான முன்னுதாரணத்தின் அடிப்படையில் திட்டமிடுதலில் இருந்து செயலாக்கம் வரை வெளிப்படையான குறைபாடுகளைக் கொண்டுள்ளது. ரயில்வே அமைச்சகத்தின் கீழ் உள்ள ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டுப் பிரிவான ஆராய்ச்சி வடிவமைப்பு மற்றும் தரநிலை அமைப்புகளால் பரிந்துரைக்கப்பட்ட தரத்திற்கு ஏற்ப லிஃப்ட் ஸ்பான் கர்டர் கட்டமைக்கப்படவில்லை. உலகின் மோசமான 2-ஆவது கடல் அரிப்புச் சூழலைக் கொண்ட பாம்பன் கடலில் கட்டப்பட்ட புதிய பாலத்தில் அதற்குரிய போதுமான நடவடிக்கைகளை மேற்கொள்ளாதது ரயில்வேயின் தவறு எனவும் தற்போதைய பாலத்தின் பல்வேறு பகுதிகளில் துருப்பிடிக்கத் தொடங்கியுள்ளன எனவும்'' அந்த அறிக்கையில் குறிப்பிட்டிருந்தார். மேலும், புதிய ரயில் பாலத்தில் 50 கி.மீ. வேகத்தில் ரயில்களை இயக்கலாம் என்றும் பரிந்துரை செய்திருந்தார்.
இதையும் படிங்க:திருநெல்வேலி டூ ஷாலிமார் எக்ஸ்பிரஸ்: நாகர்கோவிலில் இருந்து இயக்கப்படுமா?
தெற்கு ரயில்வே விளக்கம்
ரயில்வே பாதுகாப்பு ஆணையர் சௌத்ரியின் இந்த அறிக்கை சர்ச்சையான நிலையில், தெற்கு ரயில்வே, '' இதன் வடிவமைப்பு சர்வதேச ஆலோசனை நிறுவனத்தால் உருவாக்கப்பட்டது ஆகும். இதில் ஐரோப்பிய மற்றும் இந்திய மாதிரிகள் பயன்படுத்தப்பட்டுள்ளன. இந்த வடிவமைப்பு, சென்னை ஐஐடி தொழில்நுட்ப பல்கலைக்கழக வல்லுநர்களால் சரிபார்க்கப்பட்டுள்ளது. இது வெளிநாட்டு தொழில்நுட்ப ஆலோசனை நிறுவனத்தின் வடிவமைப்பு என்பதால், ரயில்வே வாரிய அறிவுறுத்தலின்படி ரயில்வே துறையும், ரயில்வே வடிவமைப்பு தர நிர்ணய அமைப்பும் தேவையான தொழில்நுட்ப ஆய்வுகளைச் செய்துள்ளன.