மதுரை: மதுரை மாநகரில் கடந்த ஓராண்டு காலமாக போதைப் பொருட்களின் உபயோகத்தை முற்றிலுமாக ஒழிக்கும் விதமாக, மாநகர காவல் துறை பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. அதன் தொடர்ச்சியாக போதைப்பொருள் விழிப்புணர்வு குறும்பட போட்டி ஒன்றை தற்போது அறிவித்துள்ளது.
இதுகுறித்து மதுரை மாநகர காவல் துறை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது, "காவல்துறை விரைந்த நடவடிக்கை காரணமாக கஞ்சா விற்பனை மற்றும் கடத்தல் தொடர்பான 606 குற்ற வழக்குகளில் 791 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். அவர்களிடமிருந்து 468.424 கிலோகிராம் கஞ்சா பறிமுதல் செய்தும், கடத்தல் மற்றும் விற்பனைக்கு பயன்படுத்திய 68 வாகனங்கள் (இருசக்கர வாகனங்கள் 50, மூன்று சக்கர வாகனங்கள் 11 மற்றும் நான்கு சக்கர வாகனங்கள் -7) பறிமுதலும் செய்யப்பட்டுள்ளது.
அதே போல் தடைசெய்யப்பட்ட குட்கா, புகையிலை பொருட்களை கடத்தி விற்பனை செய்ததற்காக 720 குற்ற வழக்குகளில் 764 குற்றவாளிகளை கைது செய்து 1953.121 கிலோகிராம் குட்கா பொருட்களை பறிமுதல் செய்தும் கடத்தல் மற்றும் விற்பனைக்கு பயன்படுத்திய 19 வாகனங்கள் (இருசக்கர வாகனங்கள் 11, மூன்று சக்கர வாகனங்கள் 2 மற்றும் நான்கு சக்கர வாகனங்கள் -6) பறிமுதலும் செய்யப்பட்டுள்ளது.
மேலும் மதுரை மாநகரில் கடந்த ஓராண்டில் போதைப்பொருள் குற்றத்தில் ஈடுபட்ட 4 நபர்கள் மீது குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்கப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். மதுரை மாநகரத்திலுள்ள 11 காவல் நிலையங்களில் பதிவான 75 கஞ்சா வழக்குகளில் தொடர்புடைய நபர்களிடமிருந்து கைப்பற்றப்பட்ட 1,634 கிலோகிராம் கஞ்சாவை மதுரை மண்டல அழித்தல் (Zonal Disposal Committee) குழு மூலம் இன்று (12.08.24) திருநெல்வேலி மாவட்டம் நாங்குவேரி தாலுகா பெத்தகுளம் கிராமத்தில் எரித்து அழிக்கப்பட்டன.
மதுரை மாநகரில் போதைப்பொருட்களின் உபயோகத்தை முற்றிலும் ஒழிக்கும் விதமாகவும், கல்லூரி மற்றும் பள்ளி மாணவர்கள் மத்தியில் போதைப் பொருட்களின் தீமை குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில்
காவல் அதிகாரிகள் மற்றும் காவலர்களால் மதுரை மாநகருக்கு உட்பட்ட 156 உயர்நிலை மற்றும்
மேல்நிலைப் பள்ளிகளிலும், 32 கல்லூரிகளிலும் 205 போதைப்பொருட்கள் தடுப்பு விழிப்புணர்வு கருத்தரங்குகள்
மற்றும் பேரணிகள் நடத்தப்பட்டு 71,168 மாணவர்கள் கலந்து கொண்டுள்ளனர்.