மதுரையில் உழைப்பாளர் தினத்தை முன்னிட்டு 1 ரூபாய்க்கு டீ மதுரை:இந்த பூமியையும் உழைப்பாளர்களையும் எவ்வாறு பிரிக்க முடியாதோ அதேபோன்று, உழைப்பாளிகளையும் தேநீரையும் ஒருபோதும் பிரிக்க முடியாது. ஒரு குவளை தேநீர் அருந்திவிட்டு நாள் முழுவதும் உழைப்பை நல்குகின்ற தொழிலாளர்களை நம் சமூகத்தில் இயல்பாகக் காண முடியும்.
அந்த உழைப்பாளர்களுக்கு உழைப்பாளர் தினத்தில் மரியாதை செலுத்தும் விதமாக, நாளை (மே.01) மட்டும் உழைக்கும் அனைவருக்கும் வெறும் 1 ரூபாய்க்கு மசாலா டீ வழங்கி அசத்துகிறது மதுரையில் உள்ள நைனாஸ் டீ பார் எனும் தேநீர் கடை.
இதுகுறித்து நைனாஸ் டீ பார் தேநீர் கடையின் நிறுவனர் நந்தினி கூறுகையில், “மதுரை பெரியார் பேருந்து நிலையம் அருகே எங்களது தேநீர்க் கடை உள்ளது, எங்களது கடையின் தனிச்சிறப்பு, நாங்கள் வழங்கும் மசாலா டீ தான். அதனை விரும்பி அருந்தும் வாடிக்கையாளர்கள் அதிகம் பேர் உண்டு.
வெறும் இஞ்சி மட்டுமின்றி திரிகடுகம் உள்ளிட்ட 13 வகையான மூலிகைகள் சேர்த்துத் தயாரிக்கப்படும் இந்த தேநீரை 10 ரூபாய்க்கு விற்பனை செய்து வருகிறோம். இவை அனைத்தையும் நாங்களே வீட்டில் தயார் செய்து, இந்த மூலிகை தேநீரை விற்பனை செய்து வருகிறோம்.
தொடர்ந்து கடந்த மூன்று ஆண்டுகளாக மே.01 ம் தேதி உழைப்பாளர் தினத்தை முன்னிட்டு, உழைப்பாளர்களுக்கு மரியாதை தரும் விதமாக 1 ரூபாய்க்கு இந்த மசாலா தேநீரை வழங்கி வருகிறோம். இதற்கு முன்பாக காளவாசல் புறவழிச் சாலையில் அமைந்துள்ள எங்களது கடையில், கடந்த இரண்டு ஆண்டுகளாக வழங்கி வந்தோம். தற்போது பெரியார் பேருந்து நிலையத்தில், நாங்கள் இந்த சேவையைச் செய்து வருகிறோம்.
மே.01 ஆம் தேதிக்கு முன்பு மூன்று நாட்கள் எங்கள் கடைக்கு வருகின்ற அனைத்து வாடிக்கையாளர்களுக்கும் பொதுமக்களுக்கும் நாங்கள் ஒரு டோக்கன் கொடுப்போம், அந்த டோக்கனை மே ஒன்றாம் தேதி எங்களிடம் கொடுத்து ரூபாய் ஒன்றுக்கு எங்களது தனிச்சிறப்பு மிக்க மசாலா தேநீரை அருந்தலாம்”, என்றார்.
இதையும் படிங்க: உச்சபட்ச வெப்பநிலை தாக்கத்தில் இருந்து வனவிலங்குகளைக் காப்பாற்றுவது எப்படி? சூழலியல் ஆர்வலர் கூறுவது என்ன? - Animals Affected By Heat