மதுரை:மதுரை மீனாட்சி சுந்தரேஸ்வரர் கோயிலில் புகழ்பெற்ற சித்திரைத் திருவிழா வரும் ஏப்ரல் 11ஆம் தேதி முதல் 23ஆம் தேதி வரை நடைபெற உள்ளது. அதில் முக்கிய நிகழ்வான மீனாட்சி திருக்கல்யாணம், ஏப்ரல் 21ஆம் தேதி மீனாட்சி அம்மன் கோயிலின் உள்ளே அமைந்துள்ள வடக்காடி வீதியின் திருக்கல்யாண மண்டபத்தில் காலை 8.35 முதல் 8.59 மணிக்குள் நடைபெறுகிறது.
மீனாட்சி திருக்கல்யாணத்தைத் தரிசிக்க விரும்பும் பக்தர்களின் வசதிக்காக, ரூ.200, ரூ.500-கான கட்டணச் சீட்டுகள் பெற்றவர்கள் வடக்கு கோபுரம் வழியாகவும், கட்டணமில்லா தரிசன முறையில், முதலில் வருபவர்களுக்கு முதல் அனுமதி என்ற அடிப்படையில், பக்தர்கள் கொள்ளளவுக்கேற்ப தெற்கு கோபுரம் வழியாகவும், திருக்கல்யாண உற்சவத்தைத் தரிசிக்க அனுமதிக்கப்படுவர்.
இதற்காக இந்து சமய அறநிலையத் துறை இணைய தளம் மற்றும் கோயில் இணைய தளம் ஆகியவை மூலம் ஏப்.9ஆம் தேதி முதல் 13ஆம் தேதி இரவு 9 மணி வரை ரூ.500, ரூ.200 கட்டணச் சீட்டு முன்பதிவு செய்ய வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது. அந்த வகையில், ரூ.500 சீட்டுக்கு ஒருவர் 2 முறை பதியலாம் எனவும், ரூ.200 சீட்டுக்கு ஒருவர் 3 முறை பதியலாம் எனவும், ஒரே நபர் இரண்டையும் பதிய முடியாது எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், பக்தர்கள் வசதிக்காக கோயிலுக்குச் சொந்தமான மேற்கு சித்திரை வீதியிலுள்ள தங்கும் விடுதியில் கோயில் பணியாளர்கள் மூலம் கட்டணச் சீட்டுகள் முன்பதிவு செய்யும் வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது. பதிவு செய்தவர்களுக்கு அவர்கள் குறிப்பிட்டுள்ள செல்பேசி எண்ணுக்குக் குறுஞ்செய்தியாக ஏப்.14ஆம் தேதி தகவல் அனுப்பப்படும். குறுந்தகவல் கிடைக்கப் பெற்றவர்கள், ஏப்.15ஆம் தேதி முதல் 20ஆம் தேதி வரை காலை 10 முதல் மாலை 5 மணி வரை விஷ்ரம் தங்கும் விடுதியில் விற்பனை மையத்தில் கட்டணச் சீட்டு பெறலாம்.
கட்டணச் சீட்டு பெற்றவர்கள் திருக்கல்யாண தினத்தன்று ஏப்.21ஆம் தேதி காலை 5 முதல் 7 மணிக்குள் கோயிலுக்குள் இருக்க வேண்டும் எனவும், ரூ.500 கட்டணச் சீட்டுதாரர்கள் கோயில் வடக்கு ராஜகோபுரம் மொட்டை முனீஸ்வரர் சன்னிதி அருகில் உள்ள வழியில் அனுமதிக்கப்படுவர் எனவும், ரூ.200 கட்டணச் சீட்டுதாரர்கள் வடக்கு சித்திரை வீதி, கிழக்கு சித்திரை வீதி சந்திப்பு அருகே உள்ள பாதை வழியாக வந்து வடக்கு ராஜகோபுரம் வழியாக கோயிலுக்குள் அனுமதிக்கப்படுவர் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதையும் படிங்க: மதுரை கள்ளழகர் மீது பாரம்பரிய முறையில் தண்ணீர் பீய்ச்சி அடிப்பதற்கான முன்பதிவு தொடங்கியது! - Madurai Chithirai Festival 2024