தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

மதுரை கல்லாங்காடு சிப்காட் தொழிற்பேட்டைக்கு எதிர்ப்பு : முதலமைச்சருக்கு மனு அளிக்க கிராம மக்கள் தீர்மானம்! - KALLANGADU SIPCOT INDUSTRIAL ESTATE

மதுரையில் அமைய உள்ள சிப்காட் தொழிற்பேட்டையால் வாழ்வாதாரம் பாதிக்கப்படும் என கிராம மக்கள் அச்சம் தெரிவித்துள்ளனர்.

கூட்டத்தில் கலந்துக்கொண்ட கிராம மக்கள்
கூட்டத்தில் கலந்துக்கொண்ட கிராம மக்கள் (ETV Bharat Tamil Nadu)

By ETV Bharat Tamil Nadu Team

Published : Feb 16, 2025, 9:45 PM IST

மதுரை: கல்லாங்காடு சுற்றுவட்டார பகுதியில் சிப்காட் அமைக்கப்படவுள்ளதால், இப்பகுதியில் உள்ள கோயில்கள், கோயில் காடுகள், விவசாய நிலங்கள், நீராதாரங்கள், மேய்ச்சல் நிலங்கள், பழங்கற்கால சின்னங்கள், கல்வெட்டுகள் பாதிப்படையும். எனவே, இத்திட்டத்தை உடனே கைவிட தமிழ்நாடு அரசுக்கும், மதுரை மாவட்ட ஆட்சியருக்கு மனு அளிக்க கிராம மக்கள் தீர்மானம் நிறைவேற்றியுள்ளனர்.

மதுரை மாவட்டம் மேலூர் அருகே வஞ்சிநகரம், பூதமங்கலம், கொடுக்கம்பட்டி ஆகிய ஊராட்சிகள் இணையும் இடத்தில் கல்லாங்காடு என்ற கிராமம் உள்ளது. இப்பகுதியில், கடந்த சில மாதங்களுக்கு முன்பாக சிப்காட் தொழிற்பேட்டை சுமார் 420 ஏக்கர் பரப்பளவில் அமைக்கப்படும் என தமிழ்நாடு தொழில்துறை அமைச்சகம் சார்பாக அறிவிக்கப்பட்டது. அறிவிப்பின்படி, அதற்கான அளவீடு செய்யும் பணிகள் தற்போது நடைபெற்று வருகின்றன.

கல்லாங்காடு கிராமத்தினர் பேட்டி (ETV Bharat Tamil Nadu)

இந்நிலையில் சிப்காட் திட்டம் குறித்து விவாதித்து முடிவு செய்வதற்கான, கல்லாங்காடு பகுதியைச் சுற்றியுள்ள கிராம மக்கள் பங்கேற்ற கூட்டம், அழகு நாச்சி அம்மன் கோயில் முன்பாக இன்று நடைபெற்றது. இதில், பல்வேறு தரப்பு மக்கள் கலந்துக் கொண்டு தங்கள் கருத்துகளை தெரிவித்தனர்.

வாழ்வாதாரம் பாதிப்பு:

இதுகுறித்து கல்லாங்காடு கிராமத்தைச் சேர்ந்த மக்கள் கூறுகையில், "கல்லாங்காட்டுப் பகுதியை, நாகப்பன்சிவன்பட்டி, மூவன்செவல்பட்டி, கம்பாளிப்பட்டி, நெல்குண்டுப்பட்டி, உசிலம்பட்டி, தாயம்பட்டி, கண்டுவபட்டி, ஒத்தப்பட்டி முத்துப்பட்டி, நாட்டார்மங்கலம், நல்ல சுக்காம்பட்டி உள்ளிட்ட கிராமங்களைச் சேர்ந்த 1000த்திற்கும் மேற்பட்ட குடும்பங்கள் ஆடு, மாடு மேய்ச்சலுக்காக பயன்படுத்தி வருகின்றனர். இப்பகுதியில் சிப்காட் அமைக்கப்பட்டால் தங்கள் வாழ்வாதாரம் பாதிக்கப்படும்.

விவசாயம் பாதிப்பு:

அதுமட்டுமன்றி கல்லாங்காடு பகுதியில் பெய்யும் மழை நீரானது, சுற்று வட்டாரப் பகுதியில் உள்ள அதிகாரக் கண்மாய், கிராந்த கண்மாய், வேம்புலி கண்மாய், சுந்தரம் கண்மாய், துவரங்குண்டு, பொன்னுச்சிகுளம், பிராந்தன் கண்மாய், கம்பாளிக்கண்மாய் ஆகிய நீர்நிலைகளுக்கு செல்லும் நீர்வரத்து முற்றிலும் பாதிக்கப்படும். இதனால், இப்பகுதியில் பயிரிடப்படும் கடலை, நெல், தென்னை, பருத்தி, காய்கறிகள், பயிறு வகைகள் உள்ளிட்ட விவசாயமும் முற்றிலும் நாசமாக வாய்ப்புள்ளதாகவும் அச்சம் தெரிவித்துள்ளனர்.

இதையும் படிங்க:விவசாயிகளுக்கு நற்செய்தி.. நேரடி நெல் கொள்முதல் குறித்த புகார்களை இனி வாட்ஸ்அப்பில் தெரிவிக்கலாம்!

மேலும், இப்பகுதியில் உள்ள 18க்கும் மேற்பட்ட சுற்றுவட்ட கிராம மக்களின் வழிபாட்டு தலமாக, கல்லாங்காட்டில் சிவன் கோயில் மற்றும் அழகுநாச்சியம்மன் கோயில் திகழ்கின்றன. அமைய உள்ள தொழிற்பேட்டையால் வழிபாட்டு தலங்களும், பண்பாட்டு விழாக்களும், கோயில் காடுகளும் சிதையும் சூழல் உள்ளது” என்று அவர்கள் கவலை தெரிவித்துள்ளனர்.

இதனால்,பல்வேறு வகையான பாதிப்புகளை ஏற்படுத்தும் சிப்காட் தொழிற்பேட்டை திட்டத்தை எதிர்த்து கீழ்க்கண்ட தீர்மானங்கள் கிராம மக்கள் சார்பாக இன்று நிறைவேற்றப்பட்டுள்ளது.

  • மதுரை மாவட்டம் மேலூர் வட்டம் வஞ்சி நகரம், பூதமங்கலம், கொடுக்கம்பட்டி ஊராட்சிகளில் உள்ள இடங்களை இணைத்து, கல்லாங்காடு சுற்றுவட்டார பகுதியில் சிப்காட் அமைக்கப்படவுள்ளது. இதனால், இப்பகுதியில் உள்ள கோயில்கள், கோயில் காடுகள், விவசாய நிலங்கள், நீராதாரங்கள், மேய்ச்சல் நிலங்கள், பழங்கற்கால சின்னங்கள், கல்வெட்டுகள் பாதிப்படையும். எனவே, இத்திட்டத்தை உடனே கைவிட வேண்டும். இதுகுறித்து தமிழக முதலமைச்சருக்கும், மதுரை மாவட்ட ஆட்சியருக்கும் மனு அளிக்க முடிவெடுக்கப்பட்டுள்ளது.
  • மேலும், கல்லாங்காடு சுற்றுவட்டாரப் பகுதிகளில் உள்ள கோயில்கள், கோயில் காடுகள், விவசாய நிலங்கள், மேய்ச்சல் நிலங்கள், நீர்நிலைகள், தொல்லியல் சின்னங்களை பாதுகாப்பதற்காக, கல்லாங்காடு சுற்றுவட்டார பகுதி மக்களை ஒருங்கிணைத்து, 18 கிராம மக்கள் கூட்டமைப்பு உருவாக்கப்படுவதை வலியுறுத்தியும் தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளது.

ABOUT THE AUTHOR

...view details