மதுரை:மாஞ்சோலையைச் சேர்ந்த அமுதா, ஜான் கென்னடி, ரோஸ்மேரி, புதிய தமிழகம் கட்சி தலைவர் கிருஷ்ணசாமி, வைகை ராஜன், பாபநாசம் ஆகியோர் மாஞ்சோலை தேயிலை தோட்ட விவகாரம் தொடர்பாக, உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில் மனுத்தாக்கல் செய்தனர். இந்த வழக்குகள் நீதிபதிகள் சுரேஷ்குமார், அருள்முருகன் அமர்வில் விசாரணைக்கு வந்தது.
அப்போது தமிழக அரசு தரப்பில், "கடந்த ஜூலை 4,5 ஆம் தேதிகளில் சிறப்பு முகாம் நடத்தப்பட்டது. அதில், 436 மனுக்கள் பெறப்பட்டுள்ளன. பெரும்பாலானோர் தென்காசி, நெல்லை, கேரளா, அசாம் உள்ளிட்ட பகுதிகளுக்கு செல்ல விருப்பம் தெரிவித்துள்ளனர்.
இலவச வீட்டுமனைப் பட்டாவில், கலைஞர் கனவு இல்ல திட்டத்தின் கீழ் வீடு கட்டித்தர மாவட்ட ஆட்சியரால் பரிந்துரை செய்யப்பட்டுள்ளது. மணிமுத்தாறு, பாப்பான்குளம் பகுதியில் 240 வீடுகள் உள்ள நிலையில், ரூ.7 லட்சம் மாநில அரசும், ரூ.1.5 லட்சம் மத்திய அரசும் வழங்கும். மீதமுள்ள தொகையை அம்மக்கள் செலுத்த வேண்டும். டான் டீ நிர்வாகத்தால் மாஞ்சோலை தேயிலை தோட்டத்தை எடுத்து நடத்த இயலாது என தெரிவிக்கப்பட்டது.
அதற்கு நீதிபதிகள் ஏன் அரசால் மாஞ்சோலை தேயிலை தோட்டத்தை எடுத்து நடத்த இயலாது? என கேள்வி எழுப்பினர். அப்போது வனத்துறையின் அறிக்கையில் அதற்கான விபரங்கள் குறிப்பிடப்பட்டுள்ளன என தெரிவிக்கப்பட்டது.
வனத்துறை தரப்பில் தாக்கல் செய்யப்பட்ட அறிக்கையில், "மாஞ்சோலை பகுதி சுற்றுச்சூழலில் மிக முக்கிய பங்காற்றி வருகிறது. சுற்றுச்சூழல் சமநிலையை பேண குத்தகைக்கு விடுவதற்கு முந்தைய நிலைக்கு மாஞ்சோலையை கொண்டு சென்று பராமரிப்பது அவசியம்.
தேயிலை தோட்ட தொழிலாளர்களில் பலர் வேறு இடங்களுக்கு சென்றுவிட்டனர். பலர் சில ஆண்டுகளுக்கு முன்பு தான் வந்துள்ளனர். ஆகவே, 3 தலைமுறைகளாக வனத்தினுள் வசிப்பவர்கள் என்ற அடிப்படையில் கையாள்வதிலும் கேள்வி எழுகிறது.
மாஞ்சோலை தேயிலை தோட்டத்தில் அசாம் மற்றும் கேரளாவில் இருந்து புலம் பெயர்ந்த தொழிலாளர்கள் வேலை செய்கிறார்கள். அரசியல் ஆதாயங்களை பெறுவதற்காக, சிலர் பொய்யான வாக்குறுதிகளை தந்து குழப்பி வருகிறார்கள்.