மதுரை:மதுரை நரிமேடு பகுதியைச் சேர்ந்த குருவம்மாள் என்பவர் உயர் நீதிமன்ற மதுரை அமர்வில் தாக்கல் செய்த மனுவில், மதுரை நரிமேடு பகுதியைச் சேர்ந்த தனது மகன் முருகன் என்ற கல்லு மண்டையனை கடந்த 16.2.2010 அன்று மதுரை மாநகர் காவல்துறை உதவி ஆணையர் வெள்ளத்துரை, சார்பு ஆய்வாளர் தென்னவன், தலைமைக் காவலர் கணேசன் ஆகியோர் சட்டவிரோதமாக சுட்டுக் கொலை செய்துள்ளனர்.
இது தொடர்பாக பாதிக்கப்பட்ட நான் கொடுத்த புகாரின் அடிப்படையில் வழக்குப்பதிவு செய்ய வேண்டும். மேலும், எனது மகன் சட்ட விரோதமாக சுட்டுக் கொலை செய்யப்பட்ட வழக்கினை சிபிஐ விசாரணைக்கு மாற்ற வேண்டும் என மனுவில் கூறியிருந்தார்.
இந்த மனு நீதிபதி பரத சக்கரவர்த்தி முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது மனுதாரர் தரப்பில், வழக்கறிஞர் ஹென்றி தீபேன் ஆஜராகி வாதிட்டார். அப்போது அவர், மனுதாரர் மகன் என்கவுண்டர் செய்யப்பட்ட வழக்கில் காவல்துறையினர் உயர் நீதிமன்றம் மற்றும் உச்ச நீதிமன்றம் வழிகாட்டுதல்களைப் பின்பற்றவில்லை.
என்கவுண்டர் செய்யப்பட்டவுடன் சம்பந்தப்பட்ட காவலர் மீது 302 கொலை வழக்கு பதிவு செய்ய வேண்டும் என்பது உச்ச நீதிமன்ற தீர்ப்பு. அதனை பின்பற்றவில்லை. என்கவுண்டர் தொடர்பாக குற்றவியல் நீதிபதி விசாரணை நடத்த வேண்டும். ஆனால், வருவாய் கோட்டாட்சியர் இதில் விசாரணை மேற்கொண்டு உள்ளார்.