தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

பொது இடங்களில் கட்சிக் கொடி கம்பங்கள்; விரைவில் தீர்ப்பு.. நீதிபதி காரசார கருத்து..! - PARTY FLAG POLES CASE

மதுரையில் கட்சிக் கொடி கம்பங்களை அமைக்க அனுமதி கோரிய வழக்குகளை தீர்ப்புக்காக ஒத்திவைத்து உயர் நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது.

கட்சிக் கொடி கம்பங்கள், மதுரை கோர்ட் (கோப்புப்படம்)
கட்சிக் கொடி கம்பங்கள், மதுரை கோர்ட் (கோப்புப்படம்) (credit - ETV Bharat Tamil Nadu)

By ETV Bharat Tamil Nadu Team

Published : Jan 7, 2025, 6:54 PM IST

மதுரை:கட்சிக் கொடி கம்பங்களை நிரந்தமாக வைக்க விதிகள் இல்லாதபோது, பொது இடங்களில் எதற்காக கட்சிக் கொடி கம்பங்கள் வைக்கப்படுகின்றன என கேள்வி எழுப்பிய நீதிபதி, இதுதொடர்பான வழக்கில் தீர்ப்பளிக்கவுள்ளதாக கூறி விசாரணையை ஒத்தி வைத்துள்ளார். இந்த வழக்கின் மீதான தீர்ப்பு எதிர்பார்ப்பை கிளப்பியுள்ளது.

மதுரை விளாங்குடியைச் சேர்ந்த சித்தன் உயர் நீதிமன்ற மதுரை கிளையில், "அதிமுகவின் 53 ஆம் ஆண்டு விழாவை முன்னிட்டு கூடல்புதூர் பகுதியில் உள்ள அதிமுக கொடி கம்பத்தை அகற்றிவிட்டு, புதிய கொடி கம்பம் அமைக்க அனுமதி வழங்குமாறு மாநகராட்சி அதிகாரிளுக்கு உத்தரவிட வேண்டும்" என மனுத்தாக்கல் செய்திருந்தார்.

இதே போல மதுரை, பைபாஸ் ரோடு பேருந்து நிறுத்தம் அருகே போக்குவரத்துக்கு இடையூறு இல்லாத இடத்தில் அதிமுக கட்சி கொடிக்கம்பம் அமைக்க அனுமதிக்கக் கோரி மதுரை மாடக்குளம் பகுதியை சேர்ந்த அதிமுக மாவட்ட பிரதிநிதி கதிரவன் மனுத்தாக்கல் செய்திருந்தார். இந்த மனுக்கள் நீதிபதி இளந்திரையன் முன்பாக விசாரணைக்கு வந்தது.

கோர்ட்டில் வாதம்

  • அரசின் தலைமை வழக்கறிஞர் ஆஜராகி, "தமிழகத்தில் இவை தொடர்பாக 114 வழக்குகள் பதிவாகியுள்ளன" என தெரிவித்தார்.
  • அதற்கு நீதிபதி, "இதில் காவல் துறையினரின் பங்கு என்ன? என கேள்வி எழுப்பினார்.
  • அதற்கு அரசுத் தரப்பில், "தடையில்லா சான்று வழங்குவது மட்டுமே காவல்துறையினரின் பங்கு" என தெரிவிக்கப்பட்டது.
  • அதனையடுத்து நீதிபதி, "கட்சிக்கொடி வைப்பது தொடர்பாக ஏதேனும் விதிகள் உள்ளனவா? என கேள்வி எழுப்பினார்.

அதற்கு அரசு தரப்பில், " தற்காலிகமாக கட்சி கொடி கம்பம் வைக்க அனுமதி கோரும் சாலை எந்த வரம்பிற்குள் வருகிறதோ அந்த அதிகாரி தடையில்லா சான்று வழங்க வேண்டும் என வழிகாட்டுதல்கள் உள்ளன" என தெரிவிக்கப்பட்டது.

அதையடுத்து நீதிபதி, "நிரந்தரமாக கட்சி கொடி கம்பங்களை வைக்க எந்த விதிகளும் இல்லாத நிலையில், எவ்வாறு கட்சி கொடி கம்பங்கள் வைக்கப்படுகின்றன? அந்த இடத்திற்கு சம்பந்தப்பட்ட கட்சியினர் வாடகை செலுத்தலாமே? என கேள்வி எழுப்பினார்.

மேலும், நீதிபதி பொது இடங்களில் ஏராளமான கட்சி கொடி கம்பங்கள் உள்ளன. இதனால் ஏராளமான பிரச்சனைகள் எழுகின்றன. பொதுவான இடத்தில் கட்சிக்கொடி கம்பத்தை வைக்க ஏன் அனுமதிக் கோருகிறீர்கள்? ஒருவரும் தங்களது வீடுகளில் வைத்துக் கொள்ளலாமே? பொது இடம் பொதுமக்களுக்கானது. அங்குதான் கம்பங்களை வைக்க வேண்டும் என்றால் சொந்தமாக நிலம் வாங்கி வைத்துக் கொள்ளலாமே? ஒவ்வொரு பேருந்து நிலையத்திலும் ஏராளமான கட்சி கொடி கம்பங்கள் உள்ளன" என கருத்துத் தெரிவித்து, வழக்கில் விரிவான உத்தரவை பிறப்பிப்பதாக கூறி, தேதி குறிப்பிடாமல் வழக்கை ஒத்தி வைத்து உத்தரவிட்டார்.

ABOUT THE AUTHOR

...view details