தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

வைகை ஆற்றில் மலர் தூவி வாக்கு வேட்டையை தொடங்கிய மதுரை சிபிஎம் வேட்பாளர் சு.வெங்கடேசன்! - Su Venkatesan election propaganda - SU VENKATESAN ELECTION PROPAGANDA

Madurai MP candidate Su.Venkatesan: நாடாளுமன்ற தேர்தலில் திமுக தலைமையிலான கூட்டணியில் மதுரை தொகுதியில் போட்டியிடும் சிபிஎம் வேட்பாளர் சு.வெங்கடேசன் வைகை ஆற்றில் மலர் தூவி தனது தேர்தல் பிரசாரத்தை தொடங்கினார்.

CPM Candidate Su Venkatesan election propaganda
CPM Candidate Su Venkatesan election propaganda

By ETV Bharat Tamil Nadu Team

Published : Mar 27, 2024, 2:00 PM IST

மதுரை: நடைபெற உள்ள நாடாளுமன்ற தேர்தலில், தமிழகத்தில் திமுக தலைமையிலான இந்தியா கூட்டணியில் அங்கம் வகிக்கும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிக்கும் மதுரை மற்றும் திண்டுக்கல் என இரண்டு மக்களவை தொகுதிகள் ஒதுக்கப்ட்டன. மதுரையில் கடந்த முறை போட்டியிட்டு வெற்றி சு.வெங்கடேசன் மீண்டும் இந்த முறையும் போட்டியிடுகிறார்.

இந்த நிலையில் இன்று (புதன்கிழமை) மதுரை கல்பாலம் பகுதியில் வைகை ஆற்றில் மலர் தூவி நாடாளுமன்ற தேர்தல் பிரசாரம் துவங்கியது. அமைச்சர் பி.டி.ஆர்.பழனிவேல் தியாகராஜன் கலந்து கொண்டு ஆற்றில் மலர் தூவி பிரசார பணிகளைத் துவக்கி வைத்தார். பின்னர், கல்பாலம் சாலை வழியாக சிம்மக்கல் சென்று மக்கள் மத்தியில் வாக்குகளை சேகரித்தனர்.

அதனைத் தொடர்ந்து அப்பகுதியில் அமைக்கப்பட்டிருந்த தற்காலிக மேடையில் திமுக கூட்டணி வேட்பாளர் சு.வெங்கடேசனை ஆதரித்து அமைச்சர் பி.டி.ஆர்.பழனிவேல் தியாகராஜன் பிரச்சாரத்தை மேற்கொண்டார். அப்போது பேசிய அவர், "கடந்த 2011ஆம் ஆண்டு முதல் மத்திய தொகுதி திமுகவின் கோட்டையாக இருந்து வருகிறது.

கடந்த ஆண்டுகளில் நடைபெற்ற நாடாளுமன்றத் தேர்தல், உள்ளாட்சித் தேர்தல் என அனைத்திலும் மதுரை மத்திய தொகுதியில் திமுக மகத்தான வெற்றி பெற்றிருக்கிறது. மேலும் 2016, 2019, 2021, 2022 ஆகிய ஆண்டுகளில் செய்த சாதனைகளைத் தாண்டி, இந்த ஆண்டு மீண்டும் ஒரு சாதனையை செய்ய வேண்டும்.

இது சாதாரண தேர்தல் அல்ல. ஏற்கனவே ஒரு தலைமுறையின் எதிர்காலத்தை சீர்குலைக்கும் வகையில் கடந்த 10 ஆண்டுகளாக ஆட்சி நடந்து கொண்டிருக்கிறது. மீண்டும் ஒருமுறை அவர்கள் ஆட்சிக்கு வந்தால் சட்டம், ஜனநாயகம் எல்லாம் நீடிக்குமா என்ற அச்சம் எழுந்துள்ளது.

இது போன்ற சூழ்நிலையில் நாம் செய்ய வேண்டிய பணி, நம்முடைய வேட்பாளர்களை வெற்றி பெற செய்ய வேண்டும் என்பதுதான். நாடு முழுவதும் மக்கள் விழிப்புணர்வோடு அதை செய்வார்கள் என்ற நம்பி, நாட்டின் எதிர்காலத்திற்கு நாம் செய்ய வேண்டிய பணியை சிறப்பாக செய்வோம்" எனக் கூறினார்

அவரைத் தொடர்ந்து பேசிய மதுரை மக்களவை வேட்பாளர் சு.வெங்கடேசன் பேசுகையில், "தமிழர்களின் நாகரிகத்திற்கு எடுத்துக்காட்டாக விளங்கக்கூடிய வைகை கரை நாகரீகம் பிறந்த வைகை நதியை வணங்கி தேர்தல் பிரச்சாரத்தை தொடங்கி இருக்கின்றோம். கடந்த கால சாதனைகள், செய்யவிருக்கும் திட்டங்கள் ஆகியவற்றை சொல்லி நாங்கள் வாக்குகள் சேகரிக்க உள்ளோம்" எனக் கூறினார்.

தொடர்ந்து தைக்கால் தெரு பகுதிகளில் வீதி வீதியாகச் சென்று வாக்குகள் சேகரித்தனர். அதன் பின்னர் எல்என்பி அக்ரஹாரம் பகுதியில் பிரச்சார வாகனத்தில் அமைச்சர் பிடிஆர் பழனிவேல் தியாகராஜனுடன் இணைந்து சு.வெங்கடேசன் பொதுமக்களிடம் வாக்குகளை சேகரித்தார். இதில் கூட்டணி கட்சி நிர்வாகிகள், சட்டமன்ற உறுப்பினர்கள், கட்சி தொண்டர்கள் என ஏராளமானவர்கள் கலந்து கொண்டனர்.

இதையும் படிங்க:பெண்கள் திருமணத்திற்கு பெற்றோர் சம்மதம் முதல் விவசாயிகளுக்கு ரூ.10 ஆயிரம் வரை.. பாமக தேர்தல் அறிக்கையின் முக்கிய அம்சங்கள்!

ABOUT THE AUTHOR

...view details