தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

மதுரை நாடாளுமன்றத் தொகுதி; வாக்கு எண்ணிக்கை முன்னேற்பாடுகள் என்ன? - Lok Sabha Election results 2024 - LOK SABHA ELECTION RESULTS 2024

Lok Sabha election results 2024: மதுரை நாடாளுமன்றத் தொகுதியில் பதிவான வாக்குகள் அனைத்தும் நாளை எண்ணப்பட உள்ள நிலையில், வாக்குப்பெட்டிகள் வைக்கப்பட்டுள்ள மதுரை மருத்துவக் கல்லூரி வளாகம் முழுவதும் ஐந்தடுக்கு பாதுகாப்போடு காவல்துறை கட்டுப்பாட்டின் கீழ் கொண்டு வரப்பட்டுள்ளது.

madurai medical college
madurai medical college (credit - ETV Bharat Tamil Nadu)

By ETV Bharat Tamil Nadu Team

Published : Jun 3, 2024, 4:41 PM IST

மதுரை:இந்தியாவின் 18வது நாடாளுமன்ற பொதுத் தேர்தல் கடந்த ஏப்ரல் 19ஆம் தேதி துவங்கி ஜூன் 1ஆம் தேதி வரை ஏழு கட்டங்களாக இந்தியா முழுவதும் நடைபெற்று முடிந்துள்ளது. இந்நிலையில், ஜூன் 4ம் தேதி பதிவான மொத்த வாக்குகள் அனைத்தும் எண்ணப்பட உள்ள நிலையில், தமிழகத்தில் உள்ள 39 நாடாளுமன்றத் தொகுதிகளுக்கான வாக்கு எண்ணிக்கை மையங்கள் அனைத்தும் காவல்துறை கட்டுப்பாட்டின் கீழ் கொண்டு வரப்பட்டுள்ளன.

கடந்த ஏப்ரல் 19ஆம் தேதி நடைபெற்ற நாடாளுமன்ற பொதுத் தேர்தலில் தமிழ்நாட்டிலுள்ள 39 நாடாளுமன்றத் தொகுதிகளில் 950 வேட்பாளர்கள் போட்டியிட்டனர். புதுச்சேரி தொகுதியில் 26 பேர் போட்டியிட்டனர்.

இந்தியா கூட்டணி: தமிழகத்தைப் பொறுத்தவரை, திமுக தலைமையிலான இந்தியா கூட்டணியில் காங்கிரஸ், இந்திய கம்யூனிஸ்ட் கட்சி, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி, விடுதலைச் சிறுத்தைகள் கட்சி, மதிமுக, கொங்கு நாடு மக்கள் தேசியக் கட்சி, இந்திய யூனியன் முஸ்லீம் லீக் ஆகியவை உள்ளன. அ.தி.மு.க. தலைமையிலான கூட்டணியில் புதிய தமிழகம், எஸ்.டி.பி.ஐ., தே.மு.தி.க. ஆகியவை உள்ளன.

தேசிய ஜனநாயக கூட்டணி: அதேபோல, பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணியில், பாட்டாளி மக்கள் கட்சி, தமிழ் மாநில காங்கிரஸ் கட்சி, அம்மா மக்கள் முன்னேற்றக் கழகம், இந்திய ஜனநாயகக் கட்சி, புதிய நீதி கட்சி, இந்திய மக்கள் கல்வி முன்னேற்றக் கழகம், தமிழக மக்கள் முன்னேற்றக் கழகம், ஓ.பன்னீர்செல்வம் அணி ஆகியவை உள்ளன. மேலும், நாம் தமிழர் கட்சி தனித்து களமிறங்கி 40 தொகுதிகளிலும் வேட்பாளர்களை நிறுத்தி இந்த தேர்தலைச் சந்தித்துள்ளது.

சு.வெங்கடேசன்: மதுரை நாடாளுமன்றத் தொகுதியை பொறுத்தவரை, திமுக கூட்டணியில் உள்ள மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் வேட்பாளராக சு.வெங்கடேசன், அதிமுக வேட்பாளராக டாக்டர் சரவணனன், பாஜக வேட்பாளராக பேராசிரியர் ராம சீனிவாசன், நாம் தமிழர் கட்சி வேட்பாளராக பேராசிரியை சத்யா தேவி ஆகியோர் களமிறங்கியுள்ளனர்.

மதுரை மேற்கு, மதுரை கிழக்கு, மதுரை வடக்கு, மதுரை தெற்கு, மதுரை மத்தி, மேலூர் ஆகிய சட்டமன்றத் தொகுதிகளை உள்ளடக்கிய மதுரை நாடாளுமன்றத் தொகுதியில் பதிவான மொத்த வாக்குகள் 9 லட்சத்து 81 ஆயிரத்து 660 ஆகும். மொத்த வாக்காளர்களில் பதிவான வாக்குகளின் அடிப்படையில் 62.04 வாக்குகள் பதிவாகியுள்ளன. மதுரை நாடாளுமன்றத் தொகுதிக்கு உட்பட்ட பகுதியில் பதிவான வாக்குப் பெட்டிகள் அனைத்தும் மதுரை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகே உள்ள மதுரை மருத்துவக் கல்லூரி வளாகத்தில் பாதுகாப்பாக சிசிடிவி கேமராக்களின் கண்காணிப்பில் வைக்கப்பட்டன.

270 கேமராக்கள்: மேலும், மருத்துவக் கல்லூரி வளாகம் முழுவதும் 24 மணி நேரமும் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகிறார்கள். மேலும், சுமார் 270 கேமராக்கள் அமைக்கப்பட்டு தீவிரமாக கண்காணித்து வருகின்றனர். வேட்பாளர்களின் முகவர்களும் சுழற்சி முறையில் மருத்துவக் கல்லூரி வளாகப் பகுதியில் இருந்து சிசிடிவி காட்சிகளின் மூலம் கண்காணித்து வருகின்றனர்.

இந்த நிலையில், நாளை (ஜூன் 4) வாக்குகள் எண்ணும் பணி காலையில் திட்டமிட்ட நேரத்தில் தொடங்க இருக்கிறது. இதனையொட்டி, வாக்குகள் எண்ணும் மைய பகுதியில் கட்சியினர், வேட்பாளர்களின் முகவர்கள் என ஏராளமானோர் கூடும் சூழலில் பாதுகாப்பு ஏற்பாடுகளும் மேற்கொள்ளப்பட்டுள்ளன. அதன்படி, மாநகர காவல் ஆணையர் லோகநாதன் மேற்பார்வையில், துணை ஆணையர்கள், உதவி ஆணையர்கள், காவல் ஆய்வாளர்கள் அடங்கிய சுமார் 1,500-க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்படுகின்றனர்.

5 அடுக்கு பாதுகாப்பு: வாக்குப்பதிவு இயந்திரங்கள் இருக்கும் சீலிடப்பட்ட அறை (ஸ்ட்ராங் ரூம்), வாக்குகள் எண்ணும் அறை, அறையின் வெளிப்பகுதி, மருத்துவக் கல்லூரி வாசல்கள், இதிலிருந்து குறிப்பிட்ட தூரம் வரையில் சுற்றுப்பகுதி என 5 அடுக்கு பாதுகாப்புக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. ஒவ்வொரு அடுக்கிலும் அதிகாரிகள் தலைமையில் குறிப்பிட்ட காவலர்கள் நிறுத்தப்பட்டுள்ளனர். இதற்காக வெளியூர்களில் இருந்தும் கூடுதலாக பட்டாலியன், ஆயுதப்படை காவலர்களும் வரவழைக்கப்பட்டுள்ளதாக காவல்துறை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

வாக்கு எண்ணிக்கைக்காக இந்திய தேர்தல் ஆணையம் மதுரை தெற்கு (192), மதுரை மத்தியம் (193) மற்றும் மதுரை மேற்கு (194) ஆகிய சட்டமன்றத் தொகுதிகளுக்கு ராஜேஷ்குமார் யாதவ் என்ற பொதுப்பார்வையாளரையும், மேலுார் (188), மதுரை கிழக்கு (189) மற்றும் மதுரை வடக்கு (191) ஆகிய சட்டமன்ற தொகுதிகளுக்கு சுபாஷ் சாந்தாராம் போர்க்கர், SCS என்ற பொதுப் பார்வையாளரையும் நியமித்துள்ளது என மதுரை மாவட்ட தேர்தல் நடத்தும் அலுவலரும் ஆட்சியருமான சங்கீதா தெரிவித்துள்ளார்.

இதையும் படிங்க:மக்களவைத் தேர்தல் 2024: தமிழகத்தில் முந்துவது யார்? - கருத்துக்கணிப்பு சொல்வது என்ன?

ABOUT THE AUTHOR

...view details