தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

மதுரை ஸ்ட்ராங் ரூம்: பழுதான சிசிடிவி கேமராக்கள் - மாவட்ட ஆட்சியர் சொல்வது என்ன? - Strong Room CCTV Camera issue - STRONG ROOM CCTV CAMERA ISSUE

Madurai Strong Room CCTV Camera Repair issue: மதுரையில் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் (EVM) வைக்கப்பட்டுள்ள அறைக்கு (ஸ்ட்ராங் ரூம்) வெளியே மின்னல் தாக்குதல் காரணமாக செயலிழந்த சிசிடிவி கேமராக்கள் உடனடியாக சரி செய்யப்பட்டு செயல்பாட்டுக்கு கொண்டு வரப்பட்டன என்று மதுரை மாவட்ட ஆட்சியர் சங்கீதா தெரிவித்துள்ளார்.

மதுரை மாவட்ட ஆட்சியர் சங்கீதா மற்றும் பழுதடைந்த சிசிடிவி கேமராக்களின் புகைப்படம்
மதுரை மாவட்ட ஆட்சியர் சங்கீதா மற்றும் பழுதடைந்த சிசிடிவி கேமராக்களின் புகைப்படம் (Photo credit - ETV Bharat Tamil Nadu)

By ETV Bharat Tamil Nadu Team

Published : May 9, 2024, 10:11 AM IST

மதுரை:2024நாடாளுமன்ற மக்களவைத் தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டு தற்போது வரை நாடு முழுவதும் மூன்று கட்ட வாக்குப்பதிவு நடைபெற்று முடிந்துள்ளது. தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி மொத்தமுள்ள 40 தொகுதிகளில், ஏப்ரல் 19ஆம் தேதி ஒரே கட்டமாக தேர்தல் நடைபெற்றது. வாக்குப்பதிவு முடிந்ததும் சீல் வைக்கப்பட்ட மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள், 'ஸ்ட்ராங் ரூம்' என்று அழைக்கப்படும் மையங்களுக்கு கொண்டு செல்லப்பட்டன.

மதுரை மக்களவைத் தொகுதிக்கான EVM இயந்திரங்கள் மதுரை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகே உள்ள மருத்துவக் கல்லூரியில் வைக்கப்பட்டு, மூன்றடுக்கு பாதுகாப்புடன் அவை கண்காணிக்கப்பட்டு வருகின்றன.

இந்த நிலையில், ஸ்ட்ராங் ரூமின் சில பகுதிகளில் உள்ள சிசிடிவி கேமராக்கள் மின்னல் தாக்குதல் காரணமாக செயலிழந்த சம்பவம் பெரும் பரபரப்பு ஏற்படுத்தியது. அவை உடனடியாக சரி செய்யப்பட்டு செயல்பாட்டுக்குக் கொண்டு வரப்பட்டன என மதுரை மாவட்ட ஆட்சியர் சங்கீதா தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், "நடந்து முடிந்த தேர்தலில் மதுரை நாடாளுமன்றத் தொகுதிக்குட்பட்ட ஆறு சட்டமன்றத் தொகுதிகளுக்கான மின்னணு வாக்குப் பதிவு இயந்திரங்கள் மற்றும் தேர்தல் தொடர்பான ஆவணங்கள் மதுரை மருத்துவக் கல்லூரி வளாகத்தில் பலத்த பாதுகாப்புடன் வைக்கப்பட்டுள்ளன.

மேலும் பாதுகாப்பு அறைகளின் முன்புறமும், கல்லூரி வளாகத்தை சுற்றியுள்ள இடங்களிலும் சிசிடிவி கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளன. இவற்றின் செயல்பாடுகளைக் கட்டுப்பாட்டு அறையில் இருந்தும், வேட்பாளர்களின் முகவர்கள் காணும் வகையிலும் வசதிகள் செய்யப்பட்டுள்ளன.

இந்த நிலையில், நேற்று (மே 8) மாலை சுமார் 6.30 மணி அளவில் மின்னல், இடியுடன் கூடிய மழை பெய்த நேரத்தில், சில சிசிடிவி கேமராக்கள் இயங்கவில்லை எனத் தகவல் பெறப்பட்டது. இதையடுத்து மாவட்ட தேர்தல் அலுவலரும், நாடாளுமன்றத் தொகுதியின் தேர்தல் நடத்தும் அலுவலருமான மா.சௌ.சங்கீதா மற்றும் மதுரை மாநகர காவல் ஆணையர் லோகநாதன் ஆகியோர் நேரடியாக வாக்கும் எண்ணும் மையத்தைப் பார்வையிட்டனர்.

மின்னணு வாக்குப் பதிவு இயந்திரங்கள் வைக்கப்பட்டுள்ள அறைகளுக்கு எதிரில் பிரத்யேகமாக அமைக்கப்பட்ட சிசிடிவி கேமராக்கள் எவ்வித இடையூறின்றி நல்ல முறையில் இயங்கிக் கொண்டிருந்தன. இதர சில சிசிடிவி கேமராக்கள் மட்டும் மின்னல் தாக்குதல் காரணமாக இயங்காமல் இருந்தன. அதைத் தொடர்ந்து, சிசிடிவி கேமராக்களின் வாயிலாகப் பாதுகாப்பு அறைகளை வேட்பாளர்களின் முகவர்கள் இடையூறின்றி தொடர்ந்து பார்வையிட்டு வருகின்றனர்.

மேலும், இயங்காமல் இருந்த கேமராக்களும் உடனடியாக சரி செய்யப்பட்டு செயல்பாட்டுக்குக் கொண்டு வரப்பட்டன. இதுபோன்ற நிகழ்வுகள் மீண்டும் எழாவண்ணம் சில முன்னெச்சரிக்கை உபகரணங்கள் பொருத்துமாறு ஒப்பந்தக்காரருக்கு அறிவுரைகள் வழங்கப்பட்டுள்ளது" மாவட்ட ஆட்சியர் சங்கீதா வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

எத்தனை கேமராக்கள் பழுது?:அதாவது, மதுரை மருத்துவக் கல்லூரி வளாகத்தில் EVM இயந்திரங்களின் பாதுகாப்பிற்காக பொருத்தப்பட்டுள்ள 100 சிசிடிவி கேமராக்களில், ஸ்ட்ராங் ரூமிற்கு வெளியே ஐந்து கேமராக்களின் வயர்கள் மின்னல் தாக்கியதில் கருகியதால் அவை பழுதானதாக மாவட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது.

மதுரையை போலவே நீலகிரி, திருப்பூர், ஈரோடு, விழுப்புரம் ஆகிய மாவட்டங்களில் வாக்குப்பதிவு இயந்திரங்கள் வைக்கப்பட்டுள்ள அறைகளில் சிசிடிவி கேமராக்கள் இயங்கவில்லை என ஏற்கெனவே புகார்கள் எழுந்தன என்பது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க: “கூடுதல் கேமராக்கள் நிறுவ அறிவுறுத்தல்”.. ஸ்ட்ராங் ரூம் விவகாரத்தில் தேர்தல் ஆணையம் பதில்!

ABOUT THE AUTHOR

...view details