மதுரை:களஞ்சிய இயக்கம் என்ற அமைப்பின் வாயிலாக கடந்த 25 ஆண்டுகளுக்கும் மேலாக தமிழ்நாடு, ஆந்திரம், கர்நாடகம், பாண்டிச்சேரி, ஒடிசா, மகராஷ்ட்ரா உள்ளிட்ட 14 இந்திய மாநிலங்களில் வறுமைக் கோட்டிற்கு கீழுள்ள மக்களை ஒருங்கிணைத்து சுயஉதவிக்குழுக்களைத் தோற்றுவித்து வந்தவர் பத்மஸ்ரீ சின்னப்பிள்ளை.
சின்னப்பிள்ளை விருதுகள்:முன்னாள் பிரதமர் வாஜ்பாயின் கைகளால் 'ஸ்த்ரீ சக்தி - மாதா ஜீஜாபாய் விருது' கடந்த 2001-ஆம் ஆண்டு ஜனவரி மாதம் சின்னப்பிள்ளை பெற்றார். அதே மாதம் தமிழக முதல்வர் மு.கருணாநிதியால் 'பொற்கிழி' வழங்கி பாராட்டப்பட்டார். தொடர்ந்து தமிழக முதல்வராக இருந்த எடப்பாடி பழனிச்சாமி 2018-ஆம் ஆண்டு 'ஔவையார் விருதும்', 2019-ஆம் ஆண்டு குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் 'பத்ம ஸ்ரீ விருதும்' வழங்கி சின்னப்பிள்ளையை கௌரவித்தனர்.
பல்வேறு விருதுகளைப் பெற்று நாடறிந்த பெண்மணியாக சின்னப்பிள்ளை வலம் வந்தபோதும்கூட, தனக்கென சொந்தவீடு ஏதுமின்றி, மதுரை மாவட்டம் அப்பன் திருப்பதி அருகேயுள்ள பில்லுசேரி கிராமத்தில் தனது மகன் வீட்டில்தான் வாழ்ந்து வந்தார்.
இந்நிலையில், பிரதமர் வீடு கட்டும் திட்டத்தில் தனக்கு வீடு தருவதாகக் கூறிச் சென்ற சிலர் பட்டா மட்டும் கொடுத்துவிட்டுச் சென்று இரண்டாண்டுகள் ஆகியும்கூட இன்னமும் வீடு கிடைக்கவில்லை என்று ஈடிவி பாரத் ஊடகத்திற்கு சின்னப்பிள்ளை மார்ச் மாதம் சிறப்பு நேர்காணல் வழங்கியிருந்தார்.
இதையும்44 படிங்க:எப்படி இருக்கிறார் சின்னப்பிள்ளை? சாதனை தமிழச்சியின் இன்றைய நிலை என்ன?
கனவு இல்லம்:இந்த செய்தி வெளியான சில மணி நேரங்களிலேயே தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் உடனடியாக, பத்மஸ்ரீ சின்னப்பிள்ளைக்கு தமிழக அரசே வீடு கட்டித்தருவதற்கான முயற்சியை மேற்கொள்ளும் என அறிவிப்புச் செய்ததுடன், அன்றைய தினமே அதற்கான பணிகளை முடுக்கிவிட்டார். இதனைத் தொடர்ந்து மதுரை மாவட்டம் கிழக்கு வட்டம் அழகர்கோவில் சாலையில் அப்பன்திருப்பதி அருகே அமைந்துள்ள திருவிழான்பட்டி கிராமத்தில் சின்னப்பிள்ளைக்கு 1 சென்ட் 380 சதுர அடி அளவீடு செய்து வழங்கப்பட்ட பட்டா நிலத்தில் சீரமைப்புப் பணிகள் தொடங்கி வைக்கப்பட்டன.
'கலைஞரின் கனவு இல்லம்' என்ற திட்டத்தின் கீழ் வீடு கட்டுவதற்கான கட்டுமானப் பணிகள் துவங்கி விறுவிறுப்பாக நடைபெற்று வந்தன. தற்போது 3 மாதங்கள் நிறைவடைந்த நிலையில், கட்டுமானப் பணிகள் ஏறக்குறைய முழுமை பெற்றுள்ளன.