மதுரை:மதுரை, ஒத்தக்கடை பகுதியில் நிலத்தடி நீர்மட்டம் பாதிக்கும் வகையில் செயல்படும் இரு தனியார் குடிநீர் சுத்திகரிப்பு நிறுவனங்கள் குடிநீர் எடுக்க தடை விதிக்க உத்தரவிடக் கோரிய வழக்கில், நீர்வளத்துறை அதிகாரிகள் பரிந்துரையின்படி விதிகளை மீறி செயல்பட்ட தனியார் சுத்திகரிப்பு குடிநீர் நிறுவனங்கள் மீது நடவடிக்கை எடுக்க மாவட்ட ஆட்சியருக்கு உயர் நீதிமன்ற மதுரைக் கிளை உத்தரவிட்டுள்ளது.
மதுரை, சம்பக்குளம் பகுதியைச் சேர்ந்த பாண்டி என்பவர் உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில் பொது நல மனுவை தாக்கல் செய்திருந்தார். அதில், "மதுரை மாவட்டம், கடச்சனேந்தல் ஒத்தக்கடை செல்லும் சாலையில் நரசிங்கம் கண்மாய் அருகிலும், நெல்லியேந்தல்பட்டி கண்மாய் அருகிலும் இரு தனியார் குடிநீர் சுத்திகரிப்பு நிறுவனங்கள் செயல்பட்டு வருகின்றன.
இந்த இரு இடங்களிலிருந்து நாளொன்றுக்கு ஏராளமான வாகனங்களில் பல லட்சம் லிட்டர் குடிநீர் எடுக்கப்படுகிறது. இந்த குடிநீரை மதுரையில் உள்ள முக்கிய தனியார் மருத்துவமனைகள், பிரபலமான ஓட்டல்கள், அடுக்குமாடிக் குடியிருப்புகள், வணிக நிறுவனங்களுக்கு விற்பனை செய்கின்றனர்.
முறையாக அனுமதி பெறாமல் நிலத்தடி நீர்மட்டம் பாதிக்கும் வகையில் குடிநீரை எடுத்து விற்பனை செய்வதால், ஒத்தக்கடை பகுதியில் குடியிருப்போர், விவசாயிகள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர். இது குறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் மனு அளித்தும் எந்த நடவடிக்கையும் இல்லை.