தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

அயோத்தி ராமர் கோயில் விழா; தனியார் நாளிதழ் மீதான விசாரணைக்கு இடைக்கால தடை விதிக்க மறுப்பு!

Ayodhya Ram Temple: அயோத்தி ராமர் கோயில் விழா அன்று, தமிழ்நாட்டின் கோயில்களில் சிறப்பு பூஜை உள்ளிட்ட நிகழ்வுகளுக்கு இந்து சமய அறநிலையத்துறை தடை விதித்ததாக செய்தி வெளியிட்டதாக தொடரப்பட்ட வழக்கிற்கு இடைக்கால தடை விதிக்க உயர் நீதிமன்ற மதுரைக்கிளை மறுப்பு தெரிவித்துள்ளது.

Etv Bharat
Etv Bharat

By ETV Bharat Tamil Nadu Team

Published : Feb 2, 2024, 5:27 PM IST

மதுரை: உத்தரப் பிரதேச மாநிலம் அயோத்தியில் குழந்தை ராமர் சிலை பிரதிஷ்டை விழா கடந்த ஜனவரி 22 அன்று நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியின் பொழுது, தமிழ்நாட்டில் உள்ள கோயில்களில் சிறப்பு வழிபாடுகள் நடத்துவதற்கும், அன்னதானம் உள்ளிட்டவை வழங்குவதற்கும் பாஜகவினர் ஏற்பாடு செய்திருந்தனர்.

மேலும், ராமர் கோயில் கும்பாபிஷேக விழாவை நேரலையாக ஒளிபரப்பவும் ஏற்பாடு செய்திருந்தனர். இதனிடையே, இதற்கு இந்து சமய அறநிலையத்துறை தடை விதித்ததாக, கடந்த ஜனவரி 21-ஆம் தேதியிட்ட பிரபல தனியார் நாளிதழில் செய்தி வெளியிடப்பட்டிருந்தது.

அச்செய்தியில், தடை தொடர்பாக இந்து சமய அறநிலையத்துறை சார்பில் வெளியிடப்பட்டிருந்த சுற்றறிக்கையின் நகல்களும் இணைக்கப்பட்டிருந்தன. இந்த நிலையில், தனியார் நாளிதழ் உண்மைக்குப் புறம்பான செய்தியை வெளியிட்டதாகக் கூறி, இந்து சமய அறநிலையத்துறை சார்பில் காவல் துறையில் புகார் அளிக்கப்பட்டிருக்கிறது.

இது குறித்து மதுரை மேலமாசி வீதியிலுள்ள மதனகோபால சுவாமி கோயிலின் செயல் அலுவலர் சக்கரை அம்மாள், மதுரை எஸ்.எஸ்.காலனி காவல் நிலையத்தில் புகார் அளித்திருக்கிறார். அப்புகாரில், “21.1.2024-ஆம் தேதி வெளியான தனியார் நாளிதழில், இந்து அறநிலையத்துறை கட்டுப்பாட்டின் நிர்வாகத்தின் கீழ்வரும் கோயில்களில், 22.1.2024-ஆம் தேதி அயோத்தியில் ராமர் கோயில் திறப்பு விழா நடைபெறும் சமயத்தில், சிறப்பு பூஜைகள் செய்ய தடை உத்தரவு விதிக்கப்பட்டிருப்பதாக அந்நாளிதழ் செய்தி வெளியிட்டிருக்கிறது.

இச்செய்தி உண்மைக்குப் புறம்பானது என்பதோடு, வதந்தியை ஏற்படுத்தி, அதன் மூலம் சமூகத்தில் மத ரீதியான உணர்வுகளைத் தூண்டிவிட்டு, பொது அமைதிக்கு பங்கம் ஏற்படுத்தும் வகையில் உள்நோக்கத்துடன் வெளியிடப்பட்டுள்ளது. எனவே அந்த குறிப்பிட்ட நாளிதழ் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்று குறிப்பிடப்பட்டிருக்கிறது.

இதன் பேரில் தனியார் நாளிதழ் மீது மத உணர்வைத் தூண்டி பொது அமைதிக்கு பங்கம் ஏற்படுத்தும் வகையில், உண்மைக்குப் புறம்பான செய்தியை வெளியிட்டதாக மதுரை எஸ்.எஸ்.காலனி காவல் நிலையத்தில் 4 பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.

இதனையடுத்து, இந்த வழக்கை ரத்து செய்ய வேண்டும் எனவும், இந்த வழக்கு நிலுவையில் உள்ள காலங்களில் இந்த வழக்கிற்கு இடைக்கால தடை விதிக்க வேண்டும் எனவும் நாளிதழ் தரப்பில் உயர் நீதிமன்ற மதுரைக்கிளையில் மனு தாக்கல் செய்யப்பட்டு இருந்தது. இந்த மனு இன்று (பிப்.2) நீதிபதி சுகுமார குரூப் முன்பு இன்று விசாரணைக்கு வந்தது.

விசாரணையின்போது அரசுத் தரப்பில், “குறிப்பிட்ட தனியார் நாளிதழ் தவறான செய்தியை வெளியிட்டுள்ளது. இதனால் பொது அமைதிக்கு பங்கம் விளைவிக்கும் வகையில் இந்த செய்தி உள்ளது. அதனால் இந்த வழக்குப் பதிவு செய்யப்பட்டு, ஆரம்ப கட்ட விசாரணையில் உள்ளது” என தெரிவிக்கப்பட்டது.

இதனையடுத்து, தனியார் நாளிதழ் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், “இந்த வழக்கு உள்நோக்கத்துடன் போடப்பட்ட பொய்யான வழக்கு. இவ்வழக்கிற்கு இடைக்கால தடை விதிக்க வேண்டும்” என வாதிட்டார். இதன் பின்னர், இடைக்கால தடை விதிக்க மறுத்த நீதிபதிகள், அரசுத் தரப்பில் விரிவான பதில் அளிக்க உத்தரவிட்டு வழக்கு விசாரணையை ஒத்தி வைத்தார்.

இதையும் படிங்க:விஜயின் அரசியல் ஸ்கெட்ச் இது தான்! படிப்படியாக காய் நகர்த்தும் திட்டம்!

ABOUT THE AUTHOR

...view details