தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

2019 நீட் தேர்வு ஆள்மாறாட்டம் வழக்கு; என்டிஏவுக்கு கெடு விதித்த உயர் நீதிமன்றக்கிளை! - NEET 2019 exam Impersonation issue - NEET 2019 EXAM IMPERSONATION ISSUE

NEET: 2019ஆம் ஆண்டு நடைபெற்ற நீட் தேர்வு மோசடியில் குற்றவாளிகளின் ஆவணங்களை கொடுக்க மறுப்பது ஏன் என கேள்வி எழுப்பிய உயர் நீதிமன்ற மதுரைக்கிளை திங்கள்கிழமை தேசிய தேர்வு முகமை நீட் ஆள்மாறாட்டம் வழக்கு சம்பந்தமான அனைத்து ஆவணங்களையும் தாக்கல் செய்ய வேண்டும் என உத்தரவிட்டது.

Madurai Bench
நீட் தொடர்பான கோப்புப்படம் (Credits - ETV Bharat Tamil Nadu)

By ETV Bharat Tamil Nadu Team

Published : Jul 10, 2024, 7:51 PM IST

மதுரை: கடந்த 2019ஆம் ஆண்டு நடந்த நீட் தேர்வில் ஆள்மாறாட்டம் செய்து தேர்ச்சி பெற்று சென்னையைச் சேர்ந்த மாணவர்கள் தேனி மருத்துவக் கல்லூரியில் சேர்ந்தது தெரியவந்தது. பின்னர், விசாரணையின் போது பல்வேறு மாணவர்கள் ஆள்மாறாட்டம் செய்து நீட் தேர்வு எழுதிய விவகாரம் தெரிய வந்த விவகாரம் நாடு முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது.

இந்த மோசடி குறித்து சிபிசிஐடி போலீசார் விசாரித்தனர். இந்த வழக்கில் முதல் குற்றவாளியாக சென்னை மாணவர் உதித் சூர்யா மேலும் சில மாணவர்கள், பெற்றோர், தேர்வுக்கு தரகராக செயல்பட்டவர்கள் என 27 நபர்கள் குற்றவாளிகளாக சேர்க்கப்பட்டனர். மேலும், இந்த வழக்கில் 27வது குற்றவாளியாக உள்ள தன்னை விடுவிக்கும்படி சென்னையைச் சேர்ந்த தருன்மோகன் என்பவர் உயர் நீதிமன்ற மதுரைக்கிளையில் மனுத்தாக்கல் செய்தார்.

இந்த நிலையில், இந்த வழக்கு நீதிபதி புகழேந்தி முன்பு இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது கூடுதல் அரசு குற்றவியல் வழக்கறிஞர் செந்தில் குமார் ஆஜராகி, “நீட் தேர்வு மோசடி வழக்கில் தேசிய தேர்வு முகமை இதுவரை எந்த தகவலையும் தரவில்லை. இதனால் வழக்கு இன்னும் தொய்வாகவே உள்ளது” என தெரிவித்தார்.

இதனையடுத்து, தேசிய தேர்வு முகமை தரப்பில் மத்திய அரசின் வழக்கறிஞர் ஆஜராகி அறிக்கை தாக்கல் செய்ய கால அவகாசம் கோரினார். இதனால் அதிருப்தி அடைந்த நீதிபதி, “வழக்கு பதிவு செய்து ஐந்து வருடம் ஆகிறது. இந்தியாவிலேயே இல்லாத மாணவருக்கு மூன்று மாநிலங்களில் தேர்வு எழுதப்பட்டுள்ளது. ஆனால், தமிழகத்தில் மாணவிகள் தாலி அணிந்து வந்தால் கூட அவர்கள் தாலியைக்கூட கழட்டச் சொல்லி சோதனை செய்கிறீர்கள்.

ஆள்மாறாட்டம் செய்து தேர்வு எழுதியவர்களின் ஆவணங்களை இதுவரை சிபிசிஐடி கேட்ட தகவலை நீட் தேர்வு நடத்துபவர்கள் வழங்கவில்லை. இதன் மூலம் குற்றவாளிகளுக்கு உடந்தையாக செயல்படுவது போல தெரிகிறது. நீட் தேர்வு முறைகேட்டில் குற்றவாளிகளுக்கு ஆதரவாக செயல்படும் அதிகாரிகளின் வீடு, அலுவலகங்களில் ஏன் சோதனை செய்ய நடத்த உத்தரவு பிறப்பிக்கக்கூடாது? இந்த நிலை தொடர்ந்தால் அவர்களை கைது செய்ய உத்தரவு பிறப்பிக்க நேரிடும்” என்றார்.

பின்னர், மத்திய அரசு தரப்பில் இறுதியாக திங்கள்கிழமை அறிக்கை தாக்கல் செய்வதாக கால அவகாசம் கோரியதால் வழக்கு விசாரணை திங்கள்கிழமைக்கு ஒத்திவைத்து நீதிபதி உத்தரவிட்டார்.

இதையும் படிங்க:நீட் தேர்வு வினாத்தாள் கசிவை மறுக்க முடியாது - உச்ச நீதிமன்றம் காட்டம்!

ABOUT THE AUTHOR

...view details