தமிழ்நாடு

tamil nadu

By ETV Bharat Tamil Nadu Team

Published : Jun 28, 2024, 9:35 PM IST

ETV Bharat / state

நீட் தேர்வு குளறுபடி: தேசிய தேர்வு முகமையிடம் விளக்கம் கோரும் உயர் நீதிமன்றம்! - madurai bench of madras high court

NEET Exam: தூத்துக்குடியில் நீட் தேர்வின்போது குறிப்பிட்ட இரு மையங்களுக்கு மட்டும் வேறு வினாத்தாள் வழங்கப்பட்டது தொடர்பான வழக்கில், தேசிய தேர்வு முகமையிடம் உரிய விளக்கம் பெற்று தெரிவிக்கவும், இறுதி விவாதத்திற்காகவும் வழக்கு விசாரணையை ஜூலை முதல் வாரம் ஒத்தி வைத்து உயர் நீதிமன்ற மதுரைக்கிளை நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

உயர்நீதிமன்ற மதுரைக்கிளை கோப்புப்படம்
உயர்நீதிமன்ற மதுரைக்கிளை கோப்புப்படம் (Credits - ETV Bharat Tamil Nadu)

மதுரை: தூத்துக்குடியைச் சேர்ந்த எம்.பிரவீன், எம்.பிரேம் குமார் உள்ளிட்ட 12 தேர்வர்கள் உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில் தாக்கல் செய்த மனுவில், "நாடு முழுவதும் கடந்த மே 6 ஆம் தேதி நடந்த நீட் தேர்வில் லட்சக்கணக்கான மாணவர்கள் கலந்து கொண்டு தேர்வு எழுதினர். இதில் தமிழகத்தில் தூத்துக்குடி மாவட்டத்தில் குறிப்பிட்ட 2 தேர்வு மையங்களில் உள்ள மாணவர்களுக்கு மட்டும் மற்ற மாணவர்களுக்கு வழங்கப்பட்ட வினாத்தாளை விட வேறு வினாத்தாள் வழங்கி உள்ளனர்.

தங்களுக்கு வழங்கப்பட்ட வினாத்தாள் முற்றிலும் மாறுபட்டு, மிகவும் கடினமாக இருந்ததால் மதிப்பெண் குறைந்தது. மனு அளித்தும் நடவடிக்கை இல்லை. எனவே நீட் தேர்வில் பாதிக்கப்பட்டவர்களின் தரவரிசை பட்டியலை மாற்றி அமைக்க வேண்டும்.

இந்த தேர்வர்களுக்கு மட்டும் தனியாக கவுன்சிலிங் நடத்தவும் உரிய உத்தரவு பிறப்பிக்க வேண்டுமெனவும், இல்லையேல் நீட் தேர்வு கவுன்சிலிங் நடத்த தடை விதிக்க வேண்டும்" என கோரியும் மனு தாக்கல் செய்திருந்தனர்.

இந்த மனு நீதிபதி சுவாமிநாதன் முன்பு விசாரணைக்கு வந்தது. இந்த மனுவை விசாரித்த நீதிபதி, நீட் தேர்வின் போது வினாத்தாள் மாற்றி வழங்கப்பட்டதாக எழுந்துள்ள குற்றச்சாட்டு குறித்து, தேசிய தேர்வு முகமையிடம் உரிய விளக்கம் பெற்று தெரிவிக்கவும், இறுதி விவாதத்திற்காகவும் வழக்கு விசாரணையை ஜூலை முதல் வாரம் ஒத்தி வைத்து உத்தரவிட்டார்.

ABOUT THE AUTHOR

...view details