தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

“கோர்ட் உத்தரவை அமல்படுத்தமாட்டோம் என அரசு அலுவலர்கள் உறுதிமொழி எடுத்துள்ளனர்” - மதுரை அமர்வு அதிருப்தி! - Madurai bench Court

Madurai bench Court : புத்தாநத்தம் பொது பாதை ஆக்கிரமிப்பு விவகாரத்தில், மணப்பாறை தாலுகா கோட்டாட்சியர் விதிகளுக்கு உட்பட்டு ஆக்கிரமிப்பாளர்களுக்கு நோட்டீஸ் அனுப்ப வேண்டும் என உயர் நீதிமன்ற மதுரை அமர்வு உத்தரவிட்டுள்ளது.

உயர் நீதிமன்ற மதுரை அமர்வு
உயர் நீதிமன்ற மதுரை அமர்வு (Photo Credits - ETV Bharat Tamil Nadu)

By ETV Bharat Tamil Nadu Team

Published : Aug 30, 2024, 3:11 PM IST

மதுரை: திருச்சி, மணப்பாறையைச் சேர்ந்த காஜா மைதீன் உயர் நீதிமன்ற மதுரை அமர்வில் நீதிமன்ற அவமதிப்பு மனுவினைத் தாக்கல் செய்திருந்தார். அதில், "மணப்பாறை புத்தாநத்தம் கிராமத்தில் பொது பாதையை ஆக்கிரமித்து கட்டப்பட்டுள்ள ஆக்கிரமிப்புகளை 12 வாரங்களுக்குள் அகற்றுமாறு நீதிமன்றம் கடந்த 2023-ல் உத்தரவிட்டது. ஆனால், இதுவரை ஆக்கிரமிப்பை அகற்ற எவ்விதமான நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. ஆகவே, நீதிமன்ற உத்தரவை செயல்படுத்த தவறிய அதிகாரிகள் மீது உரிய நடவடிக்கை எடுக்க உத்தரவிட வேண்டும்" என அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள் சுப்ரமணியன், விக்டோரியா கௌரி அமர்வு, "ஆக்கிரமிப்புகளை அகற்றக் கோரி நீதிமன்றம் ஏராளமான உத்தரவுகளை பல்வேறு வழக்குகளில் பிறப்பித்திருந்தாலும், ஆக்கிரமிப்பை அகற்ற அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுப்பதில்லை. சட்டத்தை நிலை நாட்ட நீதிபதிகள் உறுதிமொழி எடுப்பதை போல, தமிழக அரசு அலுவலர்கள் நீதிமன்ற உத்தரவை நடைமுறைப்படுத்த மாட்டோம் என உறுதிமொழி எடுத்திருக்கிறார்கள்.

ஆக்கிரமிப்புகளை 12 வாரங்களுக்குள்ளாக அகற்ற வேண்டும் என 2023-ல் உத்தரவிட்டுள்ளது. இருப்பினும், இந்நாள் வரை ஆக்கிரமிப்பை அகற்ற உரிய நடவடிக்கை எடுக்கப்படவில்லை. பஞ்சாயத்து தலைவர் மூலமாக நோட்டீஸ் அனுப்புகின்றனர். ஆனால், பஞ்சாயத்து தலைவருக்கு ஆக்கிரமிப்பை அகற்ற அதிகாரம் இல்லை. வருவாய்த் துறையினரே ஆக்கிரமிப்பை அகற்ற நடவடிக்கை எடுக்க முடியும்.

இது எங்களால் மீண்டும் உறுதிப்படுத்தப்பட்டு, ஊடகங்கள் வாயிலாக பெருமளவில் ஒளிபரப்பப்பட்டது. இருப்பினும், ஆகஸ்ட் 9ஆம் தேதி புத்தாநத்தம் கிராம பஞ்சாயத்து தலைவரால் ஆக்கிரமிப்பு அகற்றுமாறு நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது. 3 மாதங்களுக்கு ஒரு முறை நீதிபதிகள் மாறுவதால், நீதிமன்ற அவமதிப்பிலிருந்து தப்பித்து விடுகின்றனர்.

ஆகவே, ஆக்கிரமிப்புகள் மற்றும் நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடர்பான வழக்குகளை நிரந்தர அமர்வு முன்பாக பட்டியலிட சரியான நேரம் இது என தோன்றுகிறது. இதனால் ஒரு வழக்கு தொடர்ச்சியாக கண்காணிக்கப்படும். வரும் காலங்களில் இது போன்ற தவறுகள் மன்னிக்கப்படாது. நீதிமன்ற அவமதிப்பு நடவடிக்கைகளில் அதிகாரிகளை நீதிமன்றம் இரும்புக்கரம் கொண்டு செயல்படும்.

எனவே, மணப்பாறை தாலுகா கோட்டாட்சியர், தமிழ்நாடு ஆக்கிரமிப்பு அகற்ற விதிகளுக்கு உட்பட்டு ஆக்கிரமிப்பாளர்களுக்கு நோட்டீஸ் அனுப்ப வேண்டும். 7 நாட்களுக்குள்ளாக ஆக்கிரமிப்பாளர்கள் விளக்கம் அளிக்கலாம். அதன் பின்னர், கோட்டாட்சியர் விதிகளுக்கு உட்பட்டு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்” என உத்தரவிட்டு வழக்கை அக்டோபர் 8ஆம் தேதிக்கு ஒத்திவைத்தனர்.

ஈடிவி பாரத் தமிழ்நாடு (Credits - ETV Bharat Tamil Nadu)

ஈடிவி பாரத் தமிழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணையஇங்கே க்ளிக் செய்யவும்

இதையும் படிங்க:"பாதுகாப்பு குறைபாடு உறுதி" - திருச்சி என்ஐடி விவகாரத்தில் பகீர் கிளப்பிய கலெக்டர்!

ABOUT THE AUTHOR

...view details